பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா சிறிய வயதில் தனது குடும்பம் சந்தித்த பிரச்னைகள் குறித்து பேசி இருக்கிறார்.
கன்னடத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவுக்கு தொடர்ந்து வெளியான அஞ்சனி புத்ரா, சதக் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே பிரபலமாக்கியது. அதைவிட 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படம் பெரும் வெற்றியைப் பெற்று ராஷ்மிகாவுக்கு பல்வேறு மொழிகளிலும் ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது என்றே சொல்லலாம்.
இதனையடுத்து 2020ல் தெலுங்கில் அதிக வசூல் செய்த படமான சரிலேரு நீகேவ்வாரு, பீஷ்மா, 2021 ல் புஷ்பா ஆகிய படங்களில் நடித்த ராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது முன்னணி நடிகரான விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் அவர் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மிஷன் மஜ்னு என்ற இந்தி படத்திலும், புஷ்பா படத்தின் 2 ஆம் பாகத்திலும் ராஷ்மிகா பணியாற்றி வருகிறார். பொது இடங்களிலும் வெளிப்படையாக இருக்கும் ராஷ்மிகா செயல்பாடுகள் விமர்சனங்களை பெற்று வருகின்றன. இந்த நிலையில் இது குறித்து வருந்திய அவர் பதிவு ஒன்றை இன்ஸடாகிராமில் பகிர்ந்து இருந்தார்.
அதில், “இங்குள்ள ஒவ்வொரு நபராலும் நேசிக்கப்பட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அதற்கு பதிலாக எதிர்மறையை உமிழலாம் என்று அர்த்தமல்ல.
உங்கள் அனைவரையும் மகிழ்விப்பதற்காக நான் எந்த வகையான வேலைகளைச் செய்கிறேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். நான் செய்த வேலையின் மூலம் நீங்கள் உணரும் மகிழ்ச்சியில் நான் மிகவும் அக்கறை காட்டுகிறேன். நீங்களும் நானும் பெருமைப்படக்கூடிய விஷயங்களை வெளிப்படுத்த என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். குறிப்பாக சொல்லாத விஷயங்களுக்காக இணையத்தில் நான் கேலி செய்யப்படும்போதும் அது மனதளவில் நொறுங்கி வெளிப்படையாக மனதை தளர்த்துகிறது.” என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது சிறிய வயதில் தனது குடும்பம் சந்தித்த பிரச்னைகள் குறித்து அவர் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ எனக்கு கிடைத்திருக்கும் பிரபலத்தையும் ரசிகர்களின் அன்பையும் நான் சாதாரண விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. எனக்கு இன்னொரு பக்கம் இருக்கிறது. சிறிய வயதில் 2 மாதங்களுக்கு ஒரு முறை நாங்கள் வீடு மாறிய சம்பவங்கள் இருக்கின்றன.
நான் சிறுவயதில் இருந்தே போராட்டங்களை சந்தித்து வந்திருக்கிறேன். என்னுடைய பெற்றோர் வாடகை செலுத்துவதற்கும், வீடு தேடுவதற்கும் எதிர்கொண்ட சிரமங்களை இப்போது எண்ணிப்பார்க்கிறேன். என்னுடைய பெற்றோர் ஒரு போதும் நாங்கள் கேட்டதற்கு மறுப்பு தெரிவித்ததில்லை. இருப்பினும், நான் அவர்களிடம் ஒரு சிறு பொம்மையை கூட கேட்டத்தில்லை, ஏனென்றால அப்போது இருந்த வறுமையில் அதனை அவர்களால் வாங்கித்தரமுடியாது என்பது எனக்குத் தெரியும்.
என்னுடைய இதயத்தில் இன்னமும் பொம்மை வாங்க முடியாத அந்த சிறுகுழந்தை இருக்கிறாள். நான் சம்பாதிக்கும் பணம், எனக்கு கிடைக்கக்கூடிய அன்பு, ஒரு நடிகையாக எனக்கு கிடைக்கும் அங்கீகாரம் ஆகியவற்றை நான் மதிக்கிறேன். என்னுடைய குழந்தை பருவ நினைவுகள், இந்த வெற்றியை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள அனுமதிக்காது. ஏனென்றால் இது என்றென்றும் நிலைக்காது எனபது எனக்குத்தெரியும்” என்று பேசியிருக்கிறார்.