நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ விவகாரத்தில் டெல்லி காவல்துறைக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அண்மையில் ராஷ்மிகா மந்தனா கருப்பு நிற ஆடையில் லிஃப்டில் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது. அரைகுறை ஆடையுடன் இருக்கும் அந்த வீடியோ போலியானது என்றும் அது பிரிட்டீஷ் இந்திய நடிகையான ஜாரா பட்டேலின் வீடியோ என்றும் பின்னர் தெரிய வந்தது. வேண்டும் என்றே சிலர் ராஷ்மிகாவின் முகத்தை நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனது போலி வீடியோ குறித்து அதிருப்தி தெரிவித்த ராஷ்மிகா, “நடந்தது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. எனக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்காமல் இருக்க இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இதே சம்பவம் நான் பள்ளி அல்லது கல்லூரி படிக்கும்போது நடந்திருந்தால் எப்படி எதிர்கொண்டிருப்பேன் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது எனக்கு மட்டுமின்றி பலருக்கும் இழப்பை ஏற்படுத்துகிறது. நடந்த சம்பவத்தால் நான் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானேன்” என்றார்.
அதேநேரம் ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ குறித்து கண்டனம் தெரிவித்த இந்தி நடிகர் அமிதாப் பச்சன், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
இதற்கிடையே தவறாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க கோரி டெல்லி காவல்துறைக்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக டெல்லி மகளிர் ஆணையர் தலைவர் ஸ்வாதி மாலிவால் எழுதியுள்ள கடிதத்தில், நடிகையின் போலி வீடியோ விவகாரத்தில் யாரும் கைது செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ராஷ்மிகா மந்தனா மட்டும் இல்லாமல் இந்தி நடிகை கேத்ரீனா கைப் புகைப்படமும் டீப்ஃபேக் மூலம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டது. சல்மான் கான் நடிப்பில் வெளிவர இருக்கும் டைகர் 3 படத்தில் காத்ரீனா கைப் நடித்துள்ளார். படத்தில் ஒரு காட்சியில் குளியறையில் காத்ரீனா கைப் வெள்ளை நிற துண்டு கட்டிக் கொண்டு சண்டையிடும் காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த புகைப்படத்தை காத்ரீனா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவருடைய அந்த புகைப்படமும் டீப்ஃபேக் தொழிநுட்பம் மூலம் ஆபாசமான முறையில் சித்தரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
மேலும் படிக்க: