வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா,ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே இணைந்து நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் வெளியீடாக ரிலீசானது. தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற வாரிசு படம் மொத்தம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தில் முதன்முறையாக தமன் விஜய்யுடன் கூட்டணி அமைத்த நிலையில், படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றன. குறிப்பாக ‘ரஞ்சிதமே’ பாடல் யூடியூபில் வெளியானது முதலே ரசிகர்கர்களின் கவனத்தை ஈர்த்து லைக்ஸ் அள்ளி வந்தது.
வாரிசு’ திரைப்படத்தின் முதல் சிங்கிளாக வெளியான இந்தப் பாடலை விஜய் - மானசி இணைந்து பாடியிருந்தனர். கடந்த நவம்பர் மாதம் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்ததுடன் உலகம் முழுவதுமுள்ள விஜய் ரசிகர்களை ரஞ்சிதமே பாடல் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. முன்னதாக யூடியூபிலும் 100 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ரஞ்சிதமே பாடல் சாதனை படைத்த நிலையில், மற்றொருபுறம் திரையரங்குகளில் இப்பாடலின் வீடியோவும் குறிப்பாக விஜய்யின் சிங்கிள் டேக் நடனமும் கொண்டாடித் தீர்க்கப்பட்டது.
இசை வெளியீட்டு விழா, படக்குழுவினரின் பேட்டி என அனைவரும் ரஞ்சிதமே பாடலில் இடம்பெற்றுள்ள விஜய்யின் நடனம் குறித்து குறிப்பிட்டு கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில் இன்று ரஞ்சிதமே வீடியோ பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
முன்னதாக இப்படத்தின் ஜிமிக்கி பொண்ணு, தீ தளபதி, செலப்ரேஷன் ஆஃப் வாரிசு, சோல் ஆஃப் வாரிசு ஆகிய படங்களும் வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம்பெற்றன.
இதேபோல் சென்ற வாரம் ரஞ்சிதமே பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது. கொரியோகிராஃபர் ஜானி, ராஷ்மிகாவுடன் இணைந்து ரிகர்சலில் ஈடுபடும் விஜய், ரிகர்சலின்போதும் கூட சிங்கிள் டேக்கில் அலட்டிக் கொள்ளாமல் அசால்ட்டாக ஆடி அசத்தும் இந்த வீடியோ விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி லைக்ஸ் அள்ளியது.
இந்நிலையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 67 படத்துக்கு லியோ எனப் பெயரிடப்பட்டுள்ளதுடன் படத்தின் டைட்டில் ப்ரொமோ 2 நாள்களுக்கு முன் வெளியாகி வைரலானது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.