கேரளாவில் உள்ள மலைப்பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுக்குள் நுழையும் காட்டு யானைகள் அகற்றப்படும் என்று கேரள காங்கிரஸ் தலைவர் கூறியிருப்பது கடும் விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. குறிப்பாக  அந்த மாநில வனத்துறை அமைச்சர் ஏகே சசிந்திரன் இதனை கடுமையாக விமர்சித்துள்ளார். இளைஞர் காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய இடுக்கி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிபி மேத்யூதான் இவ்வாறு பேசியுள்ளார். தனக்கு அண்டை மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் யானைகளைச் சுடக்கூடிய நண்பர்கள் இருப்பதாகவும் அவர் தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார்.


“எனக்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் ஷார்ப் ஷூட்டர்ஸ் நண்பர்கள் உள்ளனர், அவர்களால் யானைகளை சுட்டு வீழ்த்த முடியும். விலங்குகள் தொடர்ந்து தொந்தரவு செய்தால், பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் என்ற முறையில், அது சட்டவிரோதமாக இருந்தாலும், மக்களைப் பாதுகாக்க இதுபோன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும், ”என்று மேத்யூ பேசியுள்ளார். அதனால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து மாற்றத்திற்கு தீர்வு காண வேண்டும் எனப் பேசியிருக்கிறார்.


இதற்கிடையில், இதற்கு எதிர்வினையாற்றி உள்ள அந்த மாநில வனத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மேத்யூ எப்போதுமே இவ்வாறு குதர்க்கமான கோபமூட்டும் வகையில் பேசக் கூடியவர் எனக் கூறியுள்ளார். மேலும் ,"ஜனவரி 31 அன்று, நாங்கள் ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தினோம், அதில் அவரும் பங்கேற்றார். யானைகளைப் பிடிக்க சிறப்பு விரைவுப் படையை வரவழைக்க கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது” எனக் குறிப்பிட்டார்.


"உண்மையில், சிறப்புக் குழு ஏற்கனவே வயநாட்டில் இருந்து மாவட்டத்திற்கு வந்து தனது வேலைகளைத் தொடங்கியுள்ளது," என்றும் அமைச்சர் சசிந்திரன் கூறினார். தலைமை வன கால்நடை மருத்துவர் டாக்டர் அருண் சகாரியா தலைமையிலான குழு மாவட்டத்திற்கு வந்து இப்பகுதியின் நிலப்பரப்பை ஆய்வு செய்து வருகிறது. மேலும் அங்கே ஊறு விளைவிக்கும் யானைகளை பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


“காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் இத்தகைய ஆத்திரமூட்டும் பேச்சினால், மக்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாகிறது. இதுபோன்ற விவகாரங்களில் சட்டப்படி மட்டுமே அரசு செயல்பட முடியும்”, இவ்வாறு சசீந்திரன் கூறியுள்ளார். காங்கிரஸ் தலைவர் கூறியது போல் வனவிலங்குகள் கொல்லப்படுவதை எந்த அரசும் ஏற்க முடியாது. யானைகள் தொடர்சியாகக் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து வந்த நிலையில் மருத்துவர் சகாரியா உதவியுடன் வயநாடு மற்றும் பாலக்காட்டில் இருந்து இரண்டு காட்டு யானைகள் பிடிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.