ரந்தீப் ஹூடா ஃபிலிம்ஸ், ஆனந்த் பண்டிட் மோஷன் பிக்சர்ஸ், லெஜண்ட் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்'.


சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் சாவர்க்கராக நடிகர் ரந்தீப் ஹூடா இயக்கி நடித்துள்ளார். சாவர்க்கரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு இருந்தது. வெளியான சிறிது நேரத்திலேயே சமூக வலைதளங்களின் இந்த போஸ்டர் மிகவும் வைரலானது. 


 



ரந்தீப் ஹூடா அறிக்கை:


ரந்தீப் ஹூடா உடன் இணைந்து உட்கார்ஷ் நைதானி என்பவரும் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். இந்தச் சூழலில் படத்தின் 100% காபிரைட்டும் தனக்கே சொந்தமானது என தனது வழக்கறிஞர் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் ரந்தீப் ஹூடா. இப்படத்திற்காக தான் உடல் அளவிலும், மன அளவிலும் கடுமையாக தன்னை தயார்படுத்திக் கொண்டார் என்றும், பொருளாதார ரீதியிலும் பல சவால்களை தனி மனிதனாக மேற்கொண்டார் என்றும் கூறி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார் ரன்தீப் ஹூடா. 


இணை தயாரிப்பாளர்கள் மறுப்பு:


 ரந்தீப் ஹூடா வெளியிட்டுள்ள இந்த அறிக்கையினை ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ படத்தின் இணை தயாரிப்பாளர்களான சந்தீப் சிங் மற்றும் ஆனந்த் பண்டிட் தரப்பு “நாங்களும் இப்படத்திற்காக உழைத்துள்ளோம், அதனால் எங்களுக்கும் இதில் உரிமைகள் உண்டு” எனக் கூறி ரந்தீப் ஹூடாவின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். 


 



‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ காப்பிரைட் பிரச்சினை தொடர்பாக ரந்தீப் ஹூடா வெளியிட்டுள்ள இந்த அறிக்கை அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த அறிக்கையில் சட்ட ரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  


ரந்தீப் ஹூடா கடுமையான முயற்சி :


சாவர்க்கர் படத்திற்காக நடிகர் ரந்தீப் ஹூடா கடுமையான பல சவால்களை மேற்கொண்டுள்ளார். படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் முடியும் வரையில் தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு வெறும் ஒரு கிளாஸ் பால் மற்றும் பேரிச்சம்பழம் மட்டுமே சாப்பிட்டு கிட்டத்தட்ட 26 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளார்.


தனது ஹேர் ஸ்டைலையும் இப்படத்திற்காக தியாகம் செய்துள்ளார். சாவர்க்கர் போல தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக அவரின் பாதி தலைக்கு மொட்டை அடித்து இருந்தார். இப்படி ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ படத்துக்காக ரந்தீப் எடுத்துக்கொண்ட முயற்சிகள் குறித்து படத்தின் இணை தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆனந்த் பண்டிட் முன்னர் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  


ரந்தீப் ஹூடா எடுத்து கொண்ட இந்த முயற்சிகள் தான் அவரை காபிரைட் விஷயத்திலும் தனக்கே உரிமை என அறிக்கைவிடத் தூண்டியுள்ளது.  ‘ஸ்வதந்த்ரிய வீர் சாவர்க்கர்’ படத்திற்கு தற்சமயம் எழுந்துள்ள இந்த சட்டரீதியிலான பிரச்சினை கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.