சேலம் மாவட்டத்தில் உள்ள கருத்தராஜபாளையம் எனும் கிராமத்தில் பின்பற்றப்படும் விநோத கட்டுப்பாடுகள் தான் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அறிவியல் வளர்ச்சி:
கடவுள் என்ற ஒன்றை வார்த்தையை நம்பியே ஒட்டுமொத்த வாழ்க்கையையே முன்னோக்கி கொண்டு சென்ற மனிதகுலம், அறிவியலின் பிரமாண்ட வளர்ச்சியை தொடர்ந்து அந்த கடவுளே யார் என தற்போது ஆராய தொடங்கியுள்ளனர். இதனால், ஆரம்ப காலங்களில் இருந்த பல்வேறு மூடநம்பிக்கைகள் தற்போது விட்டொழியப்பட்டுள்ளன. ஆனால், தற்போதும் சில கிராமங்கள் அதற்கு விதி விலக்காக இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் தற்போது நாம் பார்க்க இருக்கும் கிராமம் தான் கருத்தராஜபாளையம். இந்த கிராமத்தில் பெரும் பணக்காரராகவே இருந்தாலும், கான்க்ரீட் வீடு கட்டமாட்டோம் என்பதில் பொதுமக்கள் உறுதியாக உள்ளனர்.
கருத்தராஜபாளையம்:
சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், மல்லியகரை ஊராட்சியில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் தான் கருத்தராஜபாளையம். இந்த கிராமத்தில் ஓட்டு வீடு, குடிசை வீடு வீடு, கல்நார் தகடு வீடு போன்றவற்றை பார்க்க முடியும். ஆனால், கான்க்ரிட் வீடுகளையே, அடுக்குமாடி வீடுகளையோ பார்க்க முடியாது. காரணம், கான்க்ரீட் வீடு கட்டினால் சாமி குத்தமாகிவிடும் என கூறுகின்றனர். இதனால், கடந்த 150 ஆண்டுகளாகவே கூரை வீடுகளிலும், ஓட்டு வீடுகளிலும் மட்டுமே பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த அளவிற்கு அவர்கள் பயப்படும் அந்த கடவுள்களின் பெயர் ஊரின் காவல் தெய்வங்களன கருப்பசாமியும், பெரியசாமியும் தான்.
இரவில் சாமி ஊர்வலம்:
இரவு நேரங்களில் பெரியசாமி வேட்டைக்கு செல்வதாகவும், அவரே ஊரை காப்பாற்றி வருவதாகவும், கருத்தராஜபாளையம் கிராம மக்கள் நம்புகின்றனர். அவருக்கு எந்தவித இடையூறும் ஏற்பட்டு வீடக்கூடாது என்பதற்காகவே அந்த கிராமத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் இன்றளவும் பின்பற்றப்பட்டு வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
கான்க்ரிட் வீட்டிற்கு நோ:
காவல் தெய்வமே திறந்த வெளியில் இருக்கும் போது அவருக்கும் உயரமான இடத்தில் இருந்து, கடவுளை பார்க்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இதுநாள் வரை அங்கு ஒரு கான்கிரீட் வீடு கூட கட்டியதில்லை. வீடுகளில் படிகட்டுகள் கூட அமைக்கப்படுவதில்லை. இரவு நேரத்தில் தெய்வம் வேட்டைக்கு செல்வதால் கோயில் வளாகத்தில் கூட மின் விளக்குகள் போடுவதில்லை.
உறவினர்கள் இரவு நேரத்தில் தங்க அனுமதி இல்லை:
ஊர்க்கட்டுப்பாடு தொடர்பாக பேசும் அந்த கிராம மக்கள் “ தொட்டில் சத்தம் சாமிக்கு இடையூறாக இருக்கும் என்பதால் வீடுகளில் தொட்டில் கட்டாமல், தரையில் தான் குழந்தைகளை தூங்க வைப்போம். கோவில் உள்ளிட்ட விழாக்களில் நடத்தப்படும் விருந்தில் கூட தரையில் அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். உளி சத்தம் கேட்க கூடாது என்பதால் இங்கு, கிராமத்தில் குயவர், தச்சர்களே இல்லை. ஊருக்குள் புதியதாக வருபவர்களும், உறவினர்களும் இரவில் தங்குவதில்லை. காவல் தெய்வத்தின் கட்டளையை மீறினால் அசம்பாவிதம் ஏற்படுவதோடு, ஆண் வாரிசு இல்லாமல் போய்விடும்” என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே அண்மையில் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படிகட்டு கட்ட முயன்றவர்களை கூட, கிராம மக்களே விரட்டி அடித்துள்ளனர்.
அரசாங்க முயற்சியும் தோல்வி:
கருத்தராஜாபாளையம் கிராமத்தில் உள்ள 200-க்கும் அதிகமான குடியிருப்புகளில் சுமார் 700 பேர் வரை வசிக்கின்றனர். 1996ல், 32 பேர் தொகுப்பு வீடு கட்டினர். தெய்வ குற்றம் ஏற்பட்டதாக கூறி, ஆறு பேர், கான்கிரீட் மேல்தளத்தை அகற்றி, ஓடு வீடு அமைத்தனர். மீதமுள்ளவர்கள், மேல்தளத்தில் ஓடுகளை பதித்தனர். 2010ம் ஆண்டு முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்தில், 26 பேருக்கு உத்தரவு வழங்கியும் வீடு கட்டாததால் அந்த வீடுகள் ரத்து செய்யப்பட்டன. பிரதமர் குடியிருப்பு திட்டத்தில் 35 பேருக்கு வீடு கட்ட உத்தரவு வழங்கப்பட்டபோதும், கருத்தராஜாபாளையம் மக்கள் ஒருவர் கூட கான்கிரீட் வீடு கட்ட முன்வரவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அச்சுறுத்தும் சம்பவங்கள்:
கருத்தராஜபாளையம் மக்கள் இந்த அளவிற்கு பயப்பட காரணமாக அமைந்தது அந்த கிராமத்தில் அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்கள் தான். ஊர்க்கட்டுப்பாட்டை மீறி சில ஆண்டுகளுக்கு முன்பு கான்கிரீட் வீடு கட்டியவர்களின் குடும்பத்தில், ஆறு பேர் இறந்துவிட்டதாகவும், அவர்களது குடும்பம் தற்போது வரை முனேற்றத்தையே காணவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி, இதெல்லாம் மூட நம்பிக்கை என கூறி சில பேர் கான்க்ரீட் வீடுகளை கட்ட முயன்றபோது, அவர்களது குடும்பத்திலும் சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுபோன்ற எதேர்ச்சையாக நடந்த சம்பவங்கள் தான் மக்களை மிகவும் அச்சப்படுத்தியுள்ளன. இதன் விளைவாகவே, கான்க்ரீட் வீடெல்லாம் வேண்டாம் உயிர் தான் முக்கியம் என, கூரை மற்றும் ஓடு வீடுகளிலேயே கருத்தராஜபாளையம் மக்கள் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.