பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான ஜோடிகளான ரன்பீர் கபூர் - ஆலியா பட் இருவரும் பல ஆண்டுகள் டேட்டிங் செய்து வந்த பிறகு ஏப்ரல் 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதே ஆண்டு நவம்பர் மாதம் அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அவருக்கு ராஹா என பெயரிட்டனர். தன்னுடைய மகளுக்காக ரன்பீர் கபூர் மாற்றிக்கொண்ட பழக்கவழக்கங்கள் குறித்து சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணலில் பேசியிருந்தார். 




முதல்முறையாக ராஹாவை கையில் ஏந்திய அந்த தருணத்தை நினைத்து நெகிழ்ந்து பேசினார் ரன்பீர் கபூர். அது என் வாழ்க்கையில் ஒரு மதிப்புமிக்க தருணம். என்னை ஒரு ஆரோக்கியமான நபராக மாற்றி அமைத்தது ராஹா தான். என்னை பற்றி நான் பெரிதாக கவலைப்பட்டது கிடையாது. ஆனால் ராஹா பிறந்ததற்கு பிறகு நான் புதிதாக பிறந்தது போல உணர்கின்றேன். புதிய உணர்ச்சிகளை, எண்ணங்களை உணர்கிறேன். நான் அதுவரையில் வாழ்ந்த 40 ஆண்டுகால வாழ்க்கையை முற்றிலும் வேறு ஒரு வாழ்க்கையாக உணர்கிறேன். 


ராஹா பிறந்ததில் இருந்து வாழ்க்கை மற்றும் இறப்பு குறித்த என்னுடைய பார்வை மாறிவிட்டது. நான் ஒருபோதும் மரணத்துக்கு பயந்ததில்லை. 8 என நம்பர் மீது எனக்கு மோகம் அதிகம். அதனால் நான் என்னுடைய 71 வயதில் இறந்துவிடுவேன் என எப்போது நினைப்பேன். ஏன் அந்த யோசனை வந்தது என எனக்கு தெரியவில்லை. இன்னும் 30 ஆண்டுகள் தான் இருக்கிறது. ராஹாவால்  எல்லாமே மாறிவிட்டது. 


17 வயது முதல் நான் சிகரெட் புகைக்க ஆரம்பித்தேன். அது ஒரு கட்டத்தில் மோசமான பழக்கமாக மாறியது. நான் தந்தையான பிறகு மிகவும் ஆரோக்கியமற்றவனாக உணர்ந்தேன். ராஹாவின் ஆரோக்கியத்தை பற்றி நான் சிந்திக்கையில் ஒரு தந்தையாக புதிய பொறுப்புகளை உணர்ந்தேன். அதனால் மகளுக்காக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதால் பல ஆண்டுகளாக கடைபிடித்து வந்த புகைபிடிக்கும் பழக்கத்தை கைவிட்டேன். 


என் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம் என்னுடைய மகள் ராஹா பிறந்தது தான். குழந்தை தனக்குள் இருப்பதால் ஆலியா அதை உணர்ந்தாள். ஆனால் என்னால் அதை உணர முடியவில்லை. குழந்தை பிறந்த பிறகு டாக்டர் குழந்தையை என் கையில் கொடுத்த பிறகு எனக்கு ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என்னுடைய இதயத்தை எடுத்து கையில் கொடுத்தது போல இருந்தது. அதுவரையில் யாரைப்பற்றியும் எதற்காகவும் நான் அப்படி உணர்ந்தது இல்லை" என மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசி இருந்தார் நடிகர் ரன்பீர் கபூர்.