இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத். இவர் சமீபத்தில் தன்னுடைய 53வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருடைய பிறந்தநாள் முடிந்த இரண்டு நாட்களுக்கு பிறகு அவர் தொடர்பான படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியது. அதில் 2017ஆம் ஆண்டு அவர் மைசூரு ரயில்வே நிலையத்தில் நின்று கொண்டிருந்த படம் இருந்தது. 


இந்நிலையில் கும்ப்ளேவிற்காக 3 வைடு வீசிய ஸ்ரீநாத் கதை தெரியுமா? 


1999ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது. அந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஏமாற்றியது. சச்சின் டெண்டுலகர் காயத்துடன் விளையாடி 130 ரன்கள் அடித்து வெற்றிக்கு அருகில் அழைத்து சென்று இருந்தார். எனினும் மற்ற வீரர்கள் சொதப்பினர். இதன்காரணமாக இந்திய அணி தோல்வி அடைந்தது. 






இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அணில் கும்ப்ளே சிறப்பாக பந்துவீசினார். இவர் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் வீழ்த்தியிருந்தார். அப்போது ஜவகல் ஸ்ரீநாத் பந்துவீச வந்தார். அவர் இந்த ஓவரில் விக்கெட் வீழ்த்தினால் கும்ப்ளே ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் எடுக்க முடியாது. இதனால் அவரை அந்த ஓவரில் ஸ்டெம்ப் அருகே பந்துவீச வேண்டாம் என்று சக வீரர்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது. 


இதற்காக ஜவகல் ஸ்ரீநாத் அந்த ஓவரில் பந்தை ஸ்டெம்ப் அருகே வீசாமல் மிகவும் தள்ளி வீசினார். இந்த ஓவரில் 3 வைடு, ஒரு பவுண்டரி மிகவும் மோசமாக அமைந்தது. அதற்கு அடுத்த ஓவரில் அணில் கும்ப்ளே ஒரு விக்கெட் எடுத்து ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது நபர் என்ற சாதனையை படைத்தார். அவருடைய சாதனைக்கு ஜவகல் ஸ்ரீநாத் மிகவும் உறுதுணையாக அமைந்தார். இதுகுறித்து அணில் கும்ப்ளே பலமுறை தன்னுடைய நேர்காணலில் தெரிவித்து இருப்பார். 


ஜவகல் ஸ்ரீநாத் மொத்தம் 67 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 236 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். குறிப்பாக பத்து விக்கெட்டுகள் ஒரு முறையும், ஐந்து விக்கெட்டுகள் பத்து முறையும் வீழ்த்தியுள்ளார். மேலும், நான்கு விக்கெட்டுகள் எட்டு முறையும் வீழ்த்தியுள்ளார். இதில் குறிப்பாக, டெஸ்ட் போட்டியில், இவர் நன்கு அரைசதம் உட்பட1,009 ரன்கள் அடித்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டியை பொறுத்தமட்டில், 229 போட்டிகளில் விளையாடி, 315 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதில் மிகவும் வேகமாக 300 விக்கெட்டுகள் வீழ்த்திய எட்டாவது வீரர் ஆவார்.