மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவராக மாற முக்கிய காரணமான தினம் இன்று. 1967 ம் ஆண்டு... தமிழக வரலாற்றில் மறக்க முடியாத நாள். ஆம்... திமுக என்கிற ஆட்சி முதன் முறையாக ஆட்சி கட்டில் அமர்ந்த ஆண்டு அது. அண்ணாதுரை முதல்வராக பொறுப்பேற்று, திராவிட கட்சியின் ஆட்சியை தமிழகத்தில் ஆட்சிக்கட்டில் அமர வைத்தார். மகிழ்ச்சியான அதே ஆண்டில், இன்னொரு பேரதிர்ச்சியும் தமிழக மக்களுக்கு காத்திருந்தது. 


அதே ஆண்டு ஜனவரி 12 ம் தேதி நடிகர் எம்.ஆர்.ராதாவால், எம்.ஜி.ஆர் சுடப்பட்டார். அந்த தோட்டாக்கள் எம்.ஜி.ஆர்.,யின் தொண்டையை துளைத்த நிலையில், இனி எம்.ஜி.ஆர்., வருவாரா , மாட்டாரா என்கிற எதிர்பார்ப்போடு, தமிழ்நாட்டையே கண்ணீரில் ஆழ்த்தியது. அந்த சமயத்தில் 1966ல் அவர் நடித்த தாய்க்கு தலைமகன் திரைப்படம், அவர் சுடப்பட்ட நாளுக்கு மறுநாள் வெளியான போது, கண்ணீரோடு எம்.ஜி.ஆர்.,யின் ரசிகர்கள் தியேட்டரில் படத்தை பார்த்ததை நாடறியும்.






அதே ஆண்டில் மே 19 ம் தேதி அரசகட்டளை திரைப்படம் வெளியானாலும், அந்த திரைப்படம் 1966ல் தொடங்கிய திரைப்படம். க்ளைமாக்ஸ் டப்பிங் மட்டுமே எம்.ஜி.ஆர்.,க்கு அதில் பாக்கி இருந்தது. அந்த நேரத்தில் தான் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. அதன் பின் சிகிச்சை முடிந்து வந்த எம்.ஜி.ஆர்.,யின் குரல் வளம் மாறியது. அப்படி மாறிய குரலில் தான் அரச கட்டளை க்ளைமாக்ஸ் டப்பிங் இருக்கும். ஆனால், முற்றிலும் குரல் மாறிய நிலையில், தன் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு எம்.ஜி.ஆர்., நடித்த படம் தான் காவல்காரன்.


எம்.ஜி.ஆர்., குணமடைந்ததும், தனக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்காக எடுத்த படம். ‛எப்போது வருவான் என் தலைவன்’ என காத்திருந்த ஒரு பெருங்கூட்டத்திற்கு, திரையில் வந்து, நிறைவு தந்தார் எம்.ஜி.ஆர்., 


‛நினைத்தேன் வந்தாய் நூறு வயது...’ என்கிற ஒரு பாடல் போதும், எம்.ஜி.ஆர்., வருகையை ரசிகர்கள் கொண்டாடும் படியான வரிகள் அது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவக்குமார், நம்பியார், அசோகன், ஆர்.எஸ்.மனோகர் என எம்.ஜி.ஆர்., படங்களின் அக்மார்க் கதாபாத்திரங்கள் பலரும் அதில் இருந்தனர். சத்ய மூவிஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் தயாரிக்க, நீலகண்டன் அப்படத்தை இயக்கி இருந்தார். 


‛காது கொடுத்து கேட்டேன்... குவா குவா சத்தம்...’ மெல்லப் போ மெல்லப் போ...’ போன்ற டூயட் பாடல்கள் மூலம் எம்.ஜி.ஆர்., -ஜெயலலிதாவை திரையில் பார்த்து, துள்ளிக் குதித்து ஆர்ப்பரித்தனர் ரசிகர்கள். ஆனால், ஒரே ஒரு விசயம் இந்த படத்தில் நடந்தது. முதல் காட்சி பார்த்துவிட்டு வந்தவர்கள் அனைவரும் கண்ணீர் விட்டு கதறிக் கொண்டிருந்தார்கள். அதற்கு காரணம், எம்.ஜி.ஆர்., குரல் மாறியதே. அடுத்தடுத்த காட்சிகளுக்கு சென்று சென்று பார்த்தார்கள். ஆம், எம்.ஜி.ஆர்., குரல் முற்றிலும் மாறியிருந்தது. இந்த விசயம், எட்டுத்திக்கும் பரவ, கூட்டம் கூட்டமாக, குடும்பம் குடும்பமாக படையெடுத்து வந்து படத்தை பார்த்தார்கள். எம்.ஜி.ஆர்., குரலை கேட்டு கதறி அழுதார்கள்.


ஆம்... ஒட்டுமொத்த தமிழ்நாடே ஒரு தலைவனின் குரல் மாறியதை கொத்து கொத்தாக வந்து பார்த்து கதறி அழுத தினம் இன்று. 55 ஆண்டுகளுக் முன், இதே நாளில் காவல்காரன் வெளியான தியேட்டர்களின் கண்ணீருடன் ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தனர். இலங்கையில் 170 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் காவல்காரன் என்றால், உலகளாவிய எம்ஜிஆர்ரிசத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 






சென்னையில் பெண்களுக்காக பிரத்யேக காட்சிகள் திரையிடப்படும் அளவிற்கு, கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. சினிமாவுக்கு அழகு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு குரலும் மிக முக்கியம். குரல் தான், நடிகரின் கர்ஜனையை காட்டும் கண்ணாடி. அப்படியிருக்க, எம்.ஜி.ஆர்., தனது குரல் வளத்தை இழந்தாலும், அந்த குறையை தன் பலமாக்கி, அதிலும் வெற்றிக் கொடி ஏற்றி, தான் ஒரு மக்கள் திலகம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்தார் எம்.ஜி.ஆர். பின்னாளில், தான் தமிழ்நாட்டின் காவல்காரன் என்பதை முன்கூட்டியே படத்தின் மூலம் சொல்லியடித்து, செத்து பிழைத்த ஒரு நடிகனை மக்கள் வெள்ளம் தூக்கி கொண்டாடிய தினம் இன்று!