தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் கொண்டாடப்பட்டவர் நடிகை ரம்பா. அசத்தலான அழகும், துள்ளலான நடிப்பும், குழந்தைத்தனமான குணமும் அவரை ரசிகர்களின் மிக அருகில் கொண்டு சென்றது. இளவட்டங்களின் கனவு கன்னியாக வட்டமிட்ட ரம்பா சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு மிகவும் ஜாலியாக தனது சினிமா அனுபவம் குறித்து பகிர்ந்து இருந்தார். 


 



உழவன் தந்த மன வருத்தம் :


மலையாள திரையுலகில் அறிமுகமாகி தெலுங்கில் ஒரு முன்னணி நடிகையாக கலக்கி வந்த ரம்பா 'உழவன்' திரைப்படம் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ஒரு பாடலில் மட்டுமே ரம்பா தோன்றி இருப்பார். அது குறித்து அவர் பேசுகையில் "அந்த சமயத்தில் பாடல் ரெடி ஆகாததால் அது என்ன பாட்டு என்பது கூட எனக்கு தெரியாது. சில ஷாட்ஸ்களில் மட்டும் என்னை நடிக்க சொன்னார்கள். அவர்கள் சொன்னது போல நடித்து விட்டு சென்றுவிட்டேன். ஆனா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அவ்வளவு தான் மலையாளம் , தெலுங்கில் எல்லாம் நல்ல ஓப்பனிங் கிடைத்தது. ஆனால் தமிழில் இப்படி ஆகிவிட்டதே என வருத்தமாக இருந்துது. இயக்குநர் கதிர் மேல ரொம்ப கோபமா இருந்துது.  


 



படம் தியேட்டரில் ரிலீசான பிறகு தான் அந்த பாடலை பார்த்தேன். "பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ..." பாடலை ஸ்க்ரீனில் பார்த்ததும் எனக்கு அவ்வளவு சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்துது. அந்த பாடல் இன்று வரை என்னுடைய ஃபேவரட் பாடல். அய்யயோ இவ்வளவு நல்ல பாடலை கொடுத்த இயக்குநர் மீது தேவையில்லாமல் கோபப்பட்டுடனே என நினைத்து என்னை நானே திட்டிகொண்டேன். உடனே அவர் அடுத்ததா எனக்கு 'காதலர் தினம்' படத்தில் "ஓ மரியா... ஓ மரியா..." பாடலில் நடிக்க கேட்டார். அவரை ஏற்கனவே நான் தப்பா நினைச்சதால உடனே சரி என சொல்லிவிட்டேன். அந்த பாடலும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. 


ஏ.ஆர். ரஹ்மான் மீது கோபம் :


இந்த இரண்டு பாட்டையும் ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைத்து இருந்தார். அவரை நான் இதுவரையில் ஒரு முறை கூட பார்த்தது கிடையாது. அவரை பார்க்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. அவரை நான் இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கிறேன். அவருக்கு நான் மெசேஜ் அனுப்புவேன். ஆனால் அவர் அதுக்கு ரிப்ளை பண்ண மாட்டார். உடனே நான் அப்செட்டாகி அன்பாலோ செய்து விடுவேன். திரும்பவும் கொஞ்ச நாளுக்கு பிறகு மீண்டும் ஃபாலோ செய்வேன். என்ன இவரு ரிப்ளை செய்ய மாட்டேங்குறாரு என மறுபடியும் அன்பாலோ செய்வேன். இப்போ கூட நான் அவரை பாலோ பண்றனா இல்லையான்னு எனக்கே தெரியாது" என மிகவும் குழந்தைதனமாக பேசி இருந்தார் ரம்பா.