தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ராம் சரண். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்பொழுது ராஜமௌளி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த நிலையில் நடிகர் ராம் சரணின் தீவிர ரசிகர்கள் மூவர் அவரை சந்திக்க ஹைதராபாத் வரை நடந்து சென்ற சம்பவம் நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராம் சரணுக்கு தெலுங்கானா , ஆந்திரா போன்ற இடங்களில் ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் ராம் சரணின் தீவிர ரசிகர்களான சந்தியா ஜெயராஜ், ரவி, வீரேஷ் ஆகியோருக்கு அவரை சந்திக்க வேண்டும் என்ற திட்டம் நீண்ட காலமாக இருந்ததாக தெரிகிறது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டிந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை. எனவே நடந்து சென்றாவது தங்கள் நாயகனை சந்திக்க வேண்டும் என முடிவெடுத்த மூவரும் தங்கள் பயணத்தை தொடங்கியுள்ளனர்.
தெலுங்கானாவின் ஜோகுலாம்பா கட்வால் மாவட்டத்தில் இருந்து புறப்பட்ட மூவரும் 231 கிலோ மீட்டர் பயணம் செய்து , ஐதராபாத்தில் உள்ள ராம் சரண் இல்லத்திற்கே சென்று அவரை சந்தித்தனர். தன்னை சந்திக்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால் , 4 நாட்கள், 231 கிமீ பயணம் செய்த ரசிகர்களின் செயலை கண்டு நெகிழ்ந்துபோன ராம் சரண் அவரை ஆரத்தழுவி வரவேற்று, உபசரித்து அவர்கள் மூவருடனும் மணிக்கணக்கில் உரையாடிள்ளார். தங்களின் நோக்கம் நிறைவேறியதை அடுத்து மூவரும் இன்முகத்துடன் வீடு திரும்பியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ரசிகர்களின் இது போன்ற அதி தீவிர அன்புகளை சமாளிக்க முடியாமல் நடிகர்கள் திக்குமுக்காடி விடுவது அவ்வபோது அரங்கேறி வரும் ஒரு நிகழ்வுதான். இப்படித்தான் சமீபத்தில் ஈஸ்வரன் , பூமி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை நிதி அகர்வாலுக்கு, சென்னையில் ரசிகர்கள் சிலை வைத்து அவரை மெய்சிலிர்க்க செய்தனர். இரண்டு படங்கள் மட்டுமே நடித்துள்ள நிதி அகர்வாலுக்கு சிலை வைத்த சம்பவம் பலரையும் ஆச்சர்யபடுத்தியது. அச்சு அசலாக அவரை போலவே சிலை வடிமைத்த ரசிகர்கள் அவருக்கு கற்பூரம் காட்டி மலர்கள் தூவி உச்ச அன்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதனை அறிந்த நிதி அகர்வால் , ”ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அளவில்லாத அன்பை பார்த்து நெகிழ்ந்து போய் விட்டேன் . எனக்காக கட்டியிருக்கும் இந்த கோவிலை ஏழைகளின் இருப்பிடமாக அல்லது அவர்களுக்கு உணவு அளிப்பதற்கோ இல்லையென்றால் கல்விக்காகவோ பயன்படுத்துங்கள், உங்களுக்கு நான் என்றும் ஆதரவாக இருப்பேன்” என தெரிவித்திருந்தார்.