மெகாஸ்டார் சிரஞ்சீவி அடுத்ததாக இயக்குனர் கொரட்டால சிவாவின் சமூக அரசியல் படமான ஆச்சார்யாவில் நடிக்கிறார். தந்தை மற்றும் மகன் இனைகளான சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் தேஜா முதன்முறையாக ஒரே திரையைப் பகிர்ந்து கொள்வதால் இப்படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருகிறது. 13 வருடங்கள் திரையுலகில் இருந்த பிறகு, ராம் சரண் தனது தந்தையுடன் முதன்முறையாக ஒன்றாக பெரிய திரையில் காணப்படுவார், இதனால் அவர் மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறார்.
சிரஞ்சீவியுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து பேசிய ராம் சரண், “இது ஒரு கனவு நனவாகும் தருணம், நான் நிறைய கற்றுக்கொண்டேன். ‘ஆச்சார்யா’ படத்தில் நான் சக நடிகராக அடியெடுத்து வைக்கவில்லை, ஒரு மாணவனாக அடியெடுத்து வைத்துள்ளேன், அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.
மேலும் எந்த ஒரு ஷூட்டிங் நாட்களிலும் அவர் என்னை அதைச் செய் இதை செய் எனச் சொல்லவில்லை என்பது முக்கியமான விஷயம். அவர் என்னை, என் குணாதிசயத்தை ஷூட்டிங்கில் அப்படியே ஏற்றுக்கொண்டார், அவர் என்னை தவறு செய்ய அனுமதித்தார். அவர் என்னை இன்னொரு டேக் செய்ய அனுமதித்தார். ஆனால் அவர் அதனால் துளியும் சலனம் அடையவில்லை. கூலாகக் காணப்பட்டார், அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
சிரஞ்சீவி ராம் சரணின் இரண்டு படங்களில் கேமியோக்களில் தோன்றியிருந்தாலும், ராம் சரண் தனது தந்தையின் சமீபத்திய படங்களுக்கு தயாரிப்பாளராக மாறியிருந்தாலும், அவர்கள் ஒருபோதும் ஒரே திரையைப் பகிர்ந்து கொள்ளவில்லை. ஆச்சார்யா படத்தின் மூலம் தந்தை மற்றும் மகன் இரட்டையரை ஒரே திரையில் காணும் மெகாஸ்டார் ரசிகர்களின் கனவு நனவாக உள்ளது. மேலும் எதிர்பார்ப்புகளும் விண்ணை முட்டியுள்ளன. சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் ராம் சரண் முழுக்க முழுக்க சித்தர் வேடத்தில் நடிக்கிறார்.
இதற்கிடையில், ராம் சரண் தற்போது RRR திரைப்படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் பிஸியாக ஈடுபட்டு வருகிறார். மற்றொரு பக்கம் ஷங்கரின் பன்மொழி திரைப்படமான ’RC15’ என்ற தற்காலிகத் தலைப்பிடப்பட்ட படத்தில் பிஸியாக இருக்கிறார். கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் இதனை தயாரித்துள்ளனர். அதன் பிறகு ஜெர்சி (2019) என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய கௌதம் தின்னனுரியுடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.