ஐஸ்வர்யா ராய் தன் வாழ்வில் வந்தது எனக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று கூறி நெகிழ்ந்திருக்கிறார் அபிஷேக் பச்சன். பெண்கள் ஆண்களை விட உயர்வானவர்கள் என்று கூறிய அவர், ஐஸ்வர்யா அவருடைய வாழ்வில் நேர்ந்த கடினமான நேரங்களை எல்லாம் மிக சாமர்த்தியமாக கடந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
1994ம் ஆண்டு உலக அழகிப் பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் மணிரத்னத்தின் இருவர் படம் மூலம் நடிகையானார். அதன் பிறகு பாலிவுட்டில் அறிமுகமான ஐஸ்வர்யா ராய் முன்னணி நடிகை என்கிற அந்தஸ்தை பெற்றார். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஆராத்யா என்று பெயர் வைத்தனர். கர்ப்பம், குழந்தை என்றான பிறகு ஐஸ்வர்யா ராய் படங்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்தார். அதன் பிறகு அவர் மீண்டும் நடிக்கத் துவங்கினாலும் அவருக்கு இதுவரை பெரிய ஹிட் ஒன்றும் கிடைக்கவில்லை. இடையில் மணிரத்னத்திற்காக ராவணன் படத்தில் களமிறங்கியும் அவரது கதாபாத்திரம் பெரிதாக பேசப்படவில்லை என்பதில் ஏமாற்றம் அடைந்தார்.
இந்நிலையில் ஒரு பேட்டியில் அபிஷேக் பச்சனிடம் ஐஸ்வர்யாவின் தாக்கம் உங்களுக்குள் இருக்கிறதா என்று கேட்டபோது, "நிச்சயமாக, ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களே உயர்ந்த இனம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன். மேலும் அவர்கள் எல்லாவற்றையும் முன்னேற்ற முனைகிறார்கள். அதில் என் மனைவியும் ஒருவர். அவர் எப்போதும் எனக்கு உணர்வுப்பூர்வமாக மிகச்சிறந்த வகையில் ஆதரவாக இருந்துள்ளார். நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, எனது முழு குடும்பமும். ஐஸ்வர்யா போன்ற ஒரு வாழ்க்கைத் துணையை கொண்டிருப்பதில் உள்ள அற்புதமான விஷயம் என்னவென்றால், அவருக்கு உலகம் தெரியும். அவர் அனைத்தையும் கடந்து வந்திருக்கிறார். எனவே நீங்கள் வீட்டிற்கு வரும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது, எனது அன்றைய நாள் மிகவும் மோசமாக இருந்தால், அதனை மாற்ற ஒருவர் வீட்டில் இருக்கிறார் என்பது மிகப்பெரிய ஆறுதல்" என்று கூறினார்.
இம்மாத இறுதியில் ஐஸ்வர்யா ராயுடன் தனது 15வது திருமண நாளை கொண்டாடவிருக்கும் அபிஷேக், கடினமான சூழ்நிலைகளிலும் தன்னை அமைதியாக வைத்திருப்பதற்காக அவரை மேலும் பாராட்டினார். அவர் பேசுகையில், "நான் அவரை பல சமயங்களில் கவனித்துள்ளேன், அவர் தனது வாழ்க்கையின் கடினமான காலங்களை மிகுந்த கண்ணியத்துடனும் கருணையுடனும் சாமர்த்தியமாக கடந்து வந்துள்ளார். நான் அவரைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். நடிகர்கள் மெல்லிய உணர்வு கொண்டவர்கள், நாங்கள் மிக மிக அதிகமாக உணர்ச்சிவசப்படுவோம். சில சமயங்களில் நாங்கள் கோபமாக திட்டுவோம், நாங்கள் அதிகமாக கோபம் கொண்டு வெடிக்கிறோம்… ஆனால், ஒருநாளும் அவர் அப்படிச் செய்து நான் பார்த்ததில்லை." என்றார்.
யாமி கெளதம் மற்றும் நிம்ரத் கவுர் உடன் நடித்துள்ள அபிஷேக் பச்சனின் அடுத்த படமான தஸ்வி, நெட்ஃபிக்ஸ் மற்றும் ஜியோ சினிமாவில் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகிறது. ஐஸ்வர்யா ராய், மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.