பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பாடிய பாடகி, சூப்பர் சிங்கர் புகழ் ரக்‌ஷிதா மோசமான கார் விபத்தில் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தன் சிறு வயது முதலே பாடத் தொடங்கி புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் பாடகி ரக்‌ஷிதா. சூப்பர் சிங்கர் ஜூனியரிலேயே பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற ரக்‌ஷிதா, இறுதியாக 2018ஆம் ஆண்டு சூப்பர் சிங்கர் சீசன் 6 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு ஓட்டுகளை அள்ளினார்.


மேலும், இளையராஜாவின் இசையில் 2015ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் முதன்முதலில் பாடகியாக அறிமுகமான ரக்‌ஷிதா,  தொடர்ந்து தமிழ், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் எண்ணற்ற மேடை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார்.


ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘மிமி’ படத்தில் பாலிவுட்டில் அறிமுகமான ரக்‌ஷிதா, தொடர்ந்து ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இடம்பெற்ற ‘காலத்துக்கும் நீ வேணும்’, பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற ‘சொல்’ ஆகிய பாடல்களைப் பாடி  பிரபலமானார்.


தன் சமூக வலைதளப் பக்கங்களிலும் படு ஆக்டிவ்வாக இருந்து வரும் ரக்‌ஷிதா, உள்ளூர் தொடங்கி வெளிநாடுகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் வரை பங்கேற்று லைக்ஸ் அள்ளி வளர்ந்து வரும் பாடகியாக திரைத்துறையில் மிளிர்ந்து வருகிறார்.


இந்நிலையில், மலேசியாவில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது ரக்‌ஷிதா மோசமான கார் விபத்தில் சிக்கிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து தன் சமூக வலைதளப் பக்கத்தில் “இன்று ஒரு பெரிய விபத்தை சந்தித்தேன். இன்று காலை நான் மலேசியாவில் உள்ள விமான நிலையத்துக்கு செல்லும் போது நான் சென்ற கார் டிவைடரில் மோதி சாலையோரத்தில் நொறுங்கியது.


அந்த 10 வினாடிகளில் என் முழு வாழ்க்கையும் என் கண் முன்னால் வந்து சென்றது. ஏர் பேக்குகளுக்கு நன்றி. அவை இல்லையெனில் நிலைமை மோசமாக இருந்திருக்கும். நடந்த சம்பவத்தை நினைத்து இன்னும் உடல் நடுங்குகிறது. ஆனால் நானும் ஓட்டுநரும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த மற்ற சக பயணிகளும் சிறிய வெளிப்புற காயங்கள், சில உள் காயங்களுடன் பாதுகாப்பாக இருக்கிறோம். உயிருடன் பிழைத்தது எங்கள் அதிர்ஷ்டம், நன்றி” என ரக்‌ஷிதா பதிவிட்டுள்ளார்.


 






இந்நிலையில் ரக்‌ஷிதாவின் ரசிகர்கள் அவரது பதிவில் அவருக்கு ஆறுதல் தெரிவித்தும் காயங்களில் இருந்து மீண்டு வர வாழ்த்தியும் வருகின்றனர்.