சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்  கடந்த 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் வேட்டை நடத்தி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தின் மாஸ் காட்சிகள், பாடல்கள் என்பது படத்திற்கு ரிபீட் ஆடியன்ஸை வரவழைத்தது என்றால் படத்தின் வசனங்கள் படத்திற்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. 


இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் பேசிய ரஜினிகாந்த், ”குரைக்காத நாயும் இல்லை குறை சொல்லாத வாயும் இல்லை, ஆக மொத்தத்தில் இந்த இரண்டும் இல்லாத ஊரும் இல்லை” என குறிப்பிட்டிருந்தார்.  இந்த பேச்சில் நடிகர் ரஜினி நடிகர் விஜயைக் குறிவைத்து பேசியதாக விஜயின் ரசிகர்கள் சமூகவலைதளம் துவங்கி சுவரொட்டிகள் வரை ரஜினியை தாக்கி பதிவுகளை வெளியிட்டு வந்தனர். இதற்கு ரஜினி ரசிகர்களும் பதிலடி கொடுத்து வந்தனர். 


இந்நிலையில் ஆந்திர மாநில அமைச்சரான நடிகை ரோஜா சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ரஜினி தனது பேச்சில் குறிப்பிட்ட, ”குரைக்காத நாயும் இல்லை குறை சொல்லாத வாயும் இல்லை, ஆக மொத்தத்தில் இந்த இரண்டும் இல்லாத ஊரும் இல்லை” என்பதை தெலுங்கில் குறிப்பிட்டார். இதற்கு அவர்களது தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டது. 


ஆனால் கடந்த மே மாதம் ரஜினி ஆந்திர அரசியல் குறித்து தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ரோஜா கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். குறிப்பாக, நடிகராக அவர் மேல் எனக்கு மரியாதை உள்ளது என்றும், அவருக்கு  தெலுங்கு மாநில அரசியல் குறித்து எதுவும் தெரியாது  எனவும் சரமாரியாக விமர்சித்தார். அப்போது ரஜினியை ஜீரோ என சொன்னதால் ரஜினி ரசிகர்கள் கொதித்தெழுந்தனர். ரோஜா பேச்சுக்கு சந்திரபாபு நாயுடுவும் எதிர் கருத்து தெரிவித்தார். மேலும் ரோஜா சார்ந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் ரஜினியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார். 


ரஜினியை மீண்டும் விமர்சித்த ரோஜா


இதனிடையே பிரபல ஊடகம் ஒன்றிற்கு நேர்காணல் அளித்துள்ள நடிகை ரோஜா, ரஜினியை சரமாரியாக விமர்சித்துள்ளார். அதில், “ஆந்திர அரசியல் தெரியாமல் ரஜினி பேசியது தவறு தான். மேலும், நான் ரஜினியின் ரசிகை தான். அவருடன் நடித்தும் உள்ளேன். ஆனால் ஒரு வரலாற்று பின்னணிகள் தெரியாமல் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என ரோஜா கூறியிருந்தார்.


மேலும் அந்த நேர்காணலில், “கொஞ்ச நாளைக்கு முன்னாடி மீனாவின் நிகழ்ச்சியில் ரஜினியை நான் சந்தித்தேன். என்னுடைய செயல்பாடுகளை பற்றி பாராட்டி பேசினார். நான் 20 வருஷமா அரசியல்ல இருக்கேன். ஆனால் நான் என்ன ரஜினி மாதிரி அரசியலுக்கு வர்றன்னு சொல்லிட்டு வராமலா இருந்தேன். நிலைமை இப்படி இருக்கும்போது அவர் ஏன் அரசியல் பேசணும்?” எனவும் ரோஜா அந்த நேர்காணலில் பேசி இருந்தார். 


இந்நிலையில் ரஜினியை விமர்சனம் செய்த பின்னர் அவர் இசை வெளியீட்டு விழாவில் பேசியதை குறிப்பிட்டு பேசியதை பலரும் விமர்சனம் செய்துவருகின்றனர்.  ரோஜா ரஜினியை விமர்சனம் செய்ததால் தான் ரஜினி அர்த்தமாயிந்தா ராஜா என தெலுங்கில் குறிப்பிட்டார் எனவும் அது  அர்த்தமாயிந்தா ரோஜா எனவும்  சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.