தாட்கோ என்று அழைக்கப்படும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் வெளிநாட்டிற்கு சென்று உயர் கல்வி பயில்வதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.


தாட்கோ என்றால் என்ன? 


தாட்கோ (TAHDCO - Tamil Tamilnadu Adi Dravidar Housing Development Corporation) என்பது தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என்பதன் சுருக்கம் ஆகும். 


தாட்கோ மூலம் யாருக்கு, என்ன உதவி வழங்கப்படுகிறது?


பல ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட நிலையில் இருக்கும் ஆதி திராவிட மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்த, தமிழக அரசு அனைத்து மாவட்டங்களிலும் தாட்கோ அலுவலகங்களை அமைத்து, வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 


முதன்முதலாக கடந்த 1976-ம் ஆண்டு தாட்கோ நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போதில் இருந்து மாவட்ட வாரியாக தாட்கோ செயல்பட்டு வருகிறது. ஆதி திராவிடர் மக்களுக்கும் பழங்குடியினருக்கும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள், வங்கிக் கடன் உதவியுடன் வழங்கப்படுகின்றன.


தமிழக அரசு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய இனத்தைச் சார்ந்தவர்கள், அயல்நாடு சென்று புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி பயில அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட TOEFL, IELTS, GRE, GMAT போன்ற தகுதித் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


இதற்கான தகுதிகள் என்ன?


* ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். 


* பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


* பொறியியல் மற்றும் மேலாண்மை, தூய அறிவியல் மற்றும் பண்பாட்டு அறிவியல், வேளாண் அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல், சர்வதேச வர்த்தகம், பொருளாதார, கணக்கியல் நிதி, மனிதநேயம், சமூக அறிவியல், நுண்கலை சட்டம், கலை மற்றும் அறிவியல் போன்ற படிப்புகளை அயல் நாடுகளில் பயில விரும்புவராக இருக்க வேண்டும்.


* குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 


இப்பயிற்சிக்கான செலவீனம் தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணவர்கள் தாங்கள் விரும்பும் அயல் நாடுகளிலுள்ள கல்வி நிறுவனத்தில் மேல் படிப்பினை தொடர்வதற்கு வாய்ப்பு பெறலாம். 


இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். 


இவ்வாறு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்க http://iei.tahdco.com/hred_reg.php என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டியது அவசியம். 


இ- மெயில் முகவரி: tahdcoheadoffice@gmail.com 


தொலைபேசி எண்: 044 24310221