வேட்டையன்
த.செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் வேட்டையன். அமிதாப் பச்சன் , ஃபகத் ஃபாசில் , ரானா டகுபதி , ரித்திகா சிங் , மஞ்சு வாரியர் , துஷாரா விஜயன் , ரக்ஷன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள் . அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் அக்டோபர் 10 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் செப்டம்பர் 20 ஆம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற உள்ளது.
சூடுபிடிக்கும் வேட்டையன் ப்ரோமோஷன் பணிகள்
ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு ரஜினி நடித்து வரும் கூலி படத்தின் மீது தான் ரசிகர்களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்து வந்தது. வேட்டையன் படத்தைப் போறுத்தவரை அது என்ன மாதிரியான ஒரு படமாக இருக்கும் என்று இன்னும் உறுதியாக சொல்ல முடியவில்லை. இப்படத்தின் இயக்குநர் த.செ ஞானவேல் முன்னதாக ஜெய் பீம் படத்தை இயக்கினார். மிகத் தீவிரமான அரசியல் பேசும் படத்தை இயக்கி பாராட்டுக்களைப் பெற்ற ஞானவேல் அடுத்தபடியாக சூப்பர்ஸ்டார் ரஜினி படத்தை இயக்கியுள்ளார். இதனால் தன்னுடைய அரசியல் கருத்துக்களையும் சூப்பர்ஸ்டாரின் மாஸையும் அவர் எப்படி இணைத்து ஒரு கமர்ஷியல் படத்தை கொடுக்கப்போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் மிக ஆவலாக காத்து வருகிறார்கள்.
படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் ஒருபக்கம் நடந்து வர இன்னொரு பக்கம் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளை படிப்படியாக தொடங்கியுள்ளது படக்குழ. சமீபத்தில் வெளியான மனசிலாயோ பாடல் இன்ஸ்டண்ட் ஹிட் அடித்து வைரலாகியுள்ளது. தற்போது படத்தில் ஒவ்வொரு நடிகரின் கதாபாத்திரத்தைப் பற்றிய சிறு முன்னோட்ட வீடியோக்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
மாஸ் காட்டும் ரித்திகா சிங்
அந்த வகையில் தற்போது நடிகை ரித்திகா சிங்கின் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இறுதிச்சுற்று படத்தின் வழியாக பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த ரித்திகா சிங் இப்படத்தில் ரூபா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இறுதி சுற்று படத்திற்கு பின் மீண்டும் அவரை ஆக்ஷன் காட்சிகளில் இப்படத்தில் எதிர்பார்க்கலாம் . இதேபோல் அடுத்தடுத்து ஃபகத் ஃபாசில் , அமிதாப் பச்சன் , மஞ்சு வாரியர் முதலியோரின் கதாபாத்திர அறிமுக வீடியோக்களை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்