Rajinikhanth: நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச மாநிலம் லக்னோ சென்றுள்ள நிலையில், அங்கு அவர் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாத்துடன் இன்று ஜெயிலர் படம் பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஜெயிலர்:


கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம்  வெளியானது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் ,மோகன்லால், விநாயகம், வசந்த் ரவி, மிர்னா மேனன் உள்ளிட்ட பலரும் நடித்த  இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரிய சாதனைப் படைத்து வருகிறது. 


இமயமலை சென்ற ரஜினி:


வழக்கமாக தனது ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு இமயமலை செல்வது ரஜினியின் வழக்கம். ஆனால் இம்முறை ஜெயிலர் படம், லால் சலாம் ஷூட்டிங், ஜெயிலர் இசை வெளியிட்டு விழா ஆகியவற்றை முடித்துக் கொண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி இமயமலை கிளம்பினார். 4 ஆண்டுகளுக்குப் பின் இமயமலைக்கு பயணமானதால் ரஜினி மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். அங்கு சென்ற அவரின் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. 


இந்த பயணத்தில் ரஜினிகாந்த் ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்றார். ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு முதலில்  சென்று துறவிகளை சந்தித்து அவர்களிடம் உரையாடினார். பின்னர் உத்தரகாண்டில் இருக்கும் வியாசர் குகைக்கு சென்று வழிபட்டார். தொடர்ந்து துவாரஹட்டில் உள்ள மகாவதார் பாபாஜி குகைக்கு சென்று தியானத்தில் ஈடுபட்டார். கையில் குச்சியை ஊன்றியபடி கரடுமுரடான பாதையில், நண்பர்களுடன் அவர் பயணம் மேற்கொண்டதும்,  பாதுகாப்புக்காக போலீசாரும் உடன் சென்ற வீடியோ வைரலானது. 


யோகி ஆதித்யநாத்தை சந்திக்கும் ரஜினி:


இதனிடையே இமயமலை பயணம் முடித்துக் கொண்டு ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். தொடர்ந்து அவரது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்துக்கு ரஜினி சென்றார். அங்குள்ள துறவிகளை சந்தித்தார். இதனையடுத்து ராம்கர் மாவட்டத்தில் உள்ள சின்னமஸ்தா காளி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.


இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க உள்ளார். மேலும், அவருடன் ஜெயிலர் படத்தை இன்று பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருவதோடு, பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சந்திப்பு திரைப்படத்திற்கானாதா? அரசியல் சார்ந்த விஷயங்களா? நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளாரா? என பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.