நடிகர் ரஜினி பெங்களூரு கோயிலுக்கு சென்ற இடத்தில் நடந்த மறக்க முடியாத சம்பவம் தொடர்பாக அவர் ஒரு நேர்காணலில் தெரிவித்த கருத்து இணையத்தில் ட்ரெண்டாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் ரஜினி. கிட்டதட்ட 48 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருகிறார். 73 வயதானாலும் தான் என்றும் ராஜா தான் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார். ரஜினி நடிப்பில் கடைசியாக இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் படம் வெளியானது. தொடர்ந்து அவர் சிறப்பு வேடத்தில் நடித்த லால் சலாம் படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
தொடர்ந்து ரஜினியின் 170வது படமாக வேட்டையன் படம் தீவிரமாக உருவாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து 171வது படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வருகிறார். இப்படியான நிலையில் ரஜினி ஆன்மீகத்திலும் மிகுந்த நாட்டம் கொண்டவர் ரஜினி என்பவர் அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் அவர் கோவிலுக்கு சென்ற இடத்தில் ஒரு மறக்க முடியாத சம்பவம் நடந்துள்ளது.
இதனை சில ஆண்டுகளுக்கு முன் வெளியான நேர்காணல் ஒன்றில் ரஜினியே தெரிவித்திருப்பார். அந்த நேர்காணலில் அவரிடம், “சிவாஜி படம் வெளியாகி பெங்களூருவில் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. அப்போது சாதாரணமாக ஒரு ரூமில் நண்பர் ஒருவரிடம் நீங்கள் கோயிலுக்கு போய் விட்டு வரலாம் என சொல்கிறீர்கள். அவரோ, எதுக்கு அதெல்லாம் என கேட்கிறார். ஆனால் நீங்கள் மாறுவேடம் போட்டு கோயிலுக்கு சென்ற இடத்தில் ஒரு சம்பவம் நடந்ததே.. அதனை பற்றி சொல்லுங்கள்” என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, ‘அந்த கோயிலில் பெங்கால் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாமி கும்பிட்டு கொண்டிருந்தார். நானும் அங்கு மாறு வேடத்தில் நின்றிருந்தேன். என்னை ஏற, இறங்க பார்த்துவிட்டு, ‘என்ன பிச்சைக்காரனையெல்லாம் உள்ளே விட்டுருக்காங்க’ என நினைத்துக் கொண்டார் என புரிந்தது. உடனே ஒரு 10 ரூபாயை என்னிடம் கொடுத்தார். நானும் அதனை எதுவும் சொல்லாமல் வாங்கி கொண்டேன். அந்த சம்பவத்தை பெரிதாக நினைக்காமல், சாமி கும்பிட்டு விட்டு பிரகாரம் சுற்றி வந்தால் அங்கே அந்த பெண்மணி நின்றிருந்தார். அவர் முன்னால் நான் உடனே 200 ரூபாயை எடுத்து உண்டியலில் போடுவதை கண்டு ஒன்று புரியாமல் முழித்தார்.
பின் கீழே உட்கார்ந்து என்னை பார்த்து யோசித்து கொண்டே இருந்தார். நான் அங்கிருந்து நகர்ந்ததும் என்னை பின் தொடர்ந்து வந்தார். நான் சென்ற கார் என்னை அழைத்து செல்ல வந்தது. அதனைப் பார்த்ததும் அந்த பெண்ணுக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. நான் காருக்குள் சென்றதும் மாறு வேடத்தை கலைத்து எனது முகத்தை காட்டவும் அந்த பெண்மணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகி விட்டது. ஆனால் அதற்குள் நான் அங்கிருந்து வந்து விட்டேன்” என ரஜினி தெரிவித்திருந்தார்.