தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தின் தரமான வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து பிசியாக படங்களில் கமிட்டாகி வருகிறார்.  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து அவருக்கு ஒரு சிறந்த கம் பேக் படமாக அமைந்தது.  அதை தொடர்ந்து அவர் நடித்த லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில்  நடித்திருந்தார்.


 



தற்போது லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் த.செ. ஞானவேல் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் 'வேட்டையன்'. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி தமிழ் தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தியில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். அதிலும் நடிகர் சூர்யாவின் கங்குவா மற்றும் வேட்டையன் படம் நேரடியாக களத்தில் ஒரே நாளில் இறங்குவதால் படம் குறித்த எதிர்பார்ப்பு பல மடங்காக அதிகரித்துள்ளது.


ஜெய் பீம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான த.செ. ஞானவேல் தற்போது தலைவர் 170வது படமான 'வேட்டையன்' படத்தை இயக்கியுள்ளார். மஞ்சு வாரியர், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.   






அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் டப்பிங் செய்ய ஸ்டுடியோவுக்கு வருகை தந்த அந்த மாஸான வீடியோவை லைகா நிறுவனம்  தன்னுடைய  அதிகாரப்பூர்வமான எக்ஸ பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு கேப்ஷனாக தலைவரின் மாஸான வசனம் இடம்பெற்றுள்ளது. "குறி வைச்சா... இரை விழணும்" என பகிர்ந்துள்ளனர். இந்த போஸ்ட் லைக்ஸ்களை குவித்து வருகிறது.