ரஜினிகாந்த் நடித்து  1990-ஆம் ஆண்டில் வெளியான படம் அதிசய பிறவி . எஸ்.பி.முத்துராமன்  மற்றும் ரஜினி காம்போவில் உருவான 22-வது படம். 


ரஜினியும் குழந்தைகளும்




ரஜினி தனது 90களில் அதிகம் குழந்தை ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். அதுவும் எஸ்.பி முத்துராமன் படங்களில் அதற்கு பெரும் பங்கு இருந்திருக்கிறது. ரஜினியை பல பரிமாணங்களில் காட்ட முயற்சி செய்தபடியே இருந்திருக்கிறார் முத்துராமன். எஸ் பி முத்துராமன் படங்களால் அன்றைய குழந்தைகள் இயல்பாகவே கவரப்பட்டிருக்கிறார்கள். அவர்கள்தான் இன்று ரஜினியின் ரசிகர்களும் கூட.


90ஸ் கிட்ஸ்களுக்கு  படங்களில் ரஜினியின் கதாபாத்திரங்கள் இறந்துபோவதை  பார்ப்பது என்பது உணர்ச்சிவசப் படுத்தக்கூடியது. தனது தொடக்க காலத்தில் ரஜினியின் கேரக்டர் இறந்துபோவது சாதாரணமான ஒன்று. ஆனால் ஸ்டார் இமேஜ் பெரிதாகும்போது அதனுடன் சில நிபந்தனைகளும்  நடிகர்களுக்கு வருகின்றன. அபூர்வ ராகங்கள் தொடங்கி தர்மத்தின் தலைவன், அதிசய பிறவி , மணிரத்னம் இயக்கிய தளபதி, கபாலி ,காலா வரை ரஜினி அப்படியான கதைகளையும் தேர்வு செய்திருக்கிறார் என்பது பாராட்டத்தக்கது.




இதனால் ரஜினி ரசிகர்களுக்கு இந்த படங்களின் மேல் தனிப்பிரியம் இருக்கும். மக்களில் இருந்து எழுந்த ஒரு நாயகனாக , பெண்களுடன் நெருக்கமாக உரையாடக்கூடிய , வெட்கப்படக்கூடிய , குழந்தைகளுடன் விளையாட்டுத்தனமாக இருக்கக்கூடிய ரஜினி என பல பரிமாணங்களில் ரஜினியைப் பார்த்திருக்கிறோம்.


ரஜினி எந்த படத்தில் இறந்தாலும் இறப்பது அந்த கேரக்டர் மட்டுமில்லை நம் மனதில் இருக்கும் ரஜினியும்தான். அதனால் இந்த படங்களுக்கு எப்போதும் ஒரு காவியச் சுவை இருக்கும். சினிமாவில் காலம் காலமாக வொர்க் அவுட் ஆகும் ஒரு கிளாசிக் பிம்பம். இன்று பார்க்கும்போது 16 வயதினிலே படத்தில் வில்லனாக இறந்துபோவதை  நம்மால் ரசிக்கமுடிகிறதா என்பது கேள்விதான்.


தர்மத்தின் தலைவன் படத்தில் கூட இரண்டாவது ரஜினி வந்து நம்மை ஆறுதல்படுத்திவிடுவார்கள் , இந்த கிளாசிக் இமேஜை மிகச்சரியாக உணர்ந்து ரஜினியை பயன்படுத்தியவர் மணிரத்னம் என்று சொல்லலாம் . பா ரஞ்சித் இயக்கிய இரு ரஜினி படங்களிலும் இந்த அம்சத்தை நாம் பார்க்கலாம். 




அதிசய பிறவி அந்த வரிசையில் வரும் படம். பெரியவர்கள் மத்தியில் இந்த படம் பெரிதாக வர்க் அவுட் ஆகாமல் இருந்திருக்கலாம் ஆனால் குழந்தைகளாக இந்த படத்தைப் பார்த்தவர்கள் ஒரு ஃபேண்டஸி படத்தை பார்க்கும் அனுபவத்தோடு தான் பார்த்திருப்பார்கள். முதல் பாதியில் ஆக்‌ஷன் ஹீரோவாக இருக்கும் ரஜினியை வில்லன்கள் லாரியால் இடித்து கொன்றுவிடுகிறார்கள். நாமும் ஏமாற்றமடைந்து விடுகிறோம். ஆனால் இனிமேல் தான் கதையே...இறந்த ரஜினிகாந்த் எமலோகத்திற்கு செல்கிறார். அங்கு தன் உயிரை தவறாக எடுத்துவிட்டார்கள் என்று தெரிந்து தன்னை மீண்டும் உயிர் கொடுக்க சொல்லி அட்டகாசம் செய்கிறார்.


ஆனால் ரஜினியை தன்னைப்போலவே இருக்கும் ஒருவனின் உடலில்தான் உயிர்பிக்க முடியும் என்கிறார் எமன். ரஜினிக்கு தேவையான உடல் கிடைக்கிறதா இல்லையா? அந்த இன்னொரு ரஜினி யார் இருவரின் வாழ்க்கை எப்படி இணைகிறது? என்பதே கதை.


முழுக்க முழுக்க குழந்தைகளின் உலகத்தில் சிந்தித்த ஒரு கதை அதிசயப்பிறவி. ஐடியாவாக யோசித்தது மட்டுமில்லாமல் அதில் இருந்த டீடெயிலிங் குழந்தைகளை கவரும் அம்சங்களில் ஒன்று. நமக்கு பிடித்த ஸ்டாரின் கேரக்டர் இறந்தும் போகக்கூடாது ஆனால் அந்த எமோஷனில் ஒரு படம் பார்க்கவும் ஆசை இருந்தால் அதியச பிறவி ஒரு நல்ல சாய்ஸ்