தமிழ் சினிமா நூற்றாண்டு காலமாக எத்தனையோ வளர்ச்சிகள் அடைந்து வந்தாலும் ஹாரர் படங்களுக்கு என்றுமே வரவேற்பு இருக்கும். அவை ரசிகர்களுக்கு ஒரு வித பயம் கலந்த உணர்வை ஏற்படுத்தினாலும் அது அவர்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் தேவையான ஒன்றாக இருந்துள்ளது. 


அதிலும் குறிப்பாக 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் கிராபிக்ஸ், சவுண்ட் எஃபெக்ட் உள்ளிட்ட தொழில்நுட்ப வளர்ச்சிகள் அந்த அளவுக்கு வளர்ச்சி அடைய வில்லை என்றாலும் மிரட்டலான பேய் படங்கள் வெளியாகி வந்தன. அதில் இன்றும் 90ஸ் கிட்ஸ் மத்தியில் நினைக்கும் போதே ஒரு வித பயத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தும் ஒரு படமாக அமைந்தது '13ம் நம்பர் வீடு'. இப்படம் வெளியாகி இன்றுடன் 34 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


 




மலையாளத் திரைத் துறையைச் சேர்ந்த பேபி இயக்கத்தில் நிகழ்கள் ரவி, ஜெய்சங்கர் , லலிதா குமாரி, ஸ்ரீப்ரியா, நளினிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 


புதிதாக ஒரு குடும்பம் ஒரு வீட்டில் குடியேறுகிறது. ஏற்கனவே அந்த வீட்டில் வாழ்ந்த ஒரு பெண் மோசமான முறையில் இறக்கிறாள். அவளின் இறப்புக்கு  காரணமானவர்களை பழி தீர்த்த தீருவேன் என்ற சபதத்தோடு உயிர் இழக்கும் அப்பாவி பெண் அந்த வீட்டிலேயே ஆவியாக உலா வருகிறாள். 


தனக்கு நடந்த கொடுமைக்கு பழிதீர்க்கிறேன் என்ற பெயரில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அப்பாவிகளை கொன்று பழிதீர்க்கும் ஒரு பிடிவாதம் பிடித்த ஒரு பேயாக இருக்கிறார். இந்த சூழலில் தெய்வத்தின் சக்தியோடு எப்படி அந்த பேய் சாந்தப்படுத்த படுகிறது என்பது தான் படத்தின் கதை. நிழல்கள் ரவி ஹீரோவாக நடிக்க லலிதா குமாரி பேயாக மிரட்டி இருப்பார். அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை அலற விடும் அளவுக்கு கனகச்சிதமாக நடித்திருந்தார்.  இப்படம் இன்று பார்க்கும் போது கூட மிகவும் ஸ்வாரஸ்யமாக இருக்கும். 


இன்று பார்க்கும் போது சிரிப்புசிரிப்பாக வந்தாலும் படம் வெளியான சமயத்தில் யார் இந்த படத்தை தியேட்டரில் தனியாக பார்க்கிறார்களோ அவர்களுக்கு 1000 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு எல்லாம் செய்தித்தாள்களில் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள்  மத்தியில் மிக நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இப்படம் இந்தியில் கூட 'ஹவுஸ் நம்பர் 13 ' என்ற பெயரில் வெளியானது. இப்படம் பார்ப்பதற்கு பழைய ஸ்டைலில் இருந்தாலும் இன்றைய தலைமுறையினர் விரும்பும் திகில் ஃபீல் நிச்சயம் கிடைக்கும். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் பேய் படங்களின் லிஸ்டில் '13ம் நம்பர் வீடு' படத்துக்கு என்றுமே முதலிடம் தான்.