சந்திரமுகி படம் வெளியாகி 17 வருடங்கள் ஆகிறது, திரையரங்குகளில் ஒரு வருட காலம் ஓடி சாதனை செய்தது. ஆனாலும் இப்படத்திற்கான மோகம் இன்றளவும் ரசிகர்களின் மத்தியில் குறையவில்லை. ஒவ்வொரு முறையும் இப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது, மக்கள் சலிக்காமல் சந்திரமுகி படத்தை ரசித்து பார்க்கின்றனர்.


இதேப்போல், நேற்று இப்படம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதனால், இன்று சந்திரமுகி ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது. இதில், இப்படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களும் இனிமையான நினைவுகளையும் பகிர்ந்து வருகின்றனர்.






நடிகர் ரஜினிகாந்த், சந்திரமுகி படத்தை பற்றி பேசிய சில தகவல்கள் ட்விட்டரில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ,  படம் வெளியான போது நடந்த காட்சிகளின் தொகுப்பாகும். அந்த வீடியோவில்,  “ தமிழ் பட வரலாற்றில் இப்படி பட்ட ஒரு படம் வந்து இருக்காது. சந்திரமுகி படமானது, படையப்பா போல ஒரு படையம்மா. 27 ஆண்டுகளுக்கு பிறகு, நடிப்பை பற்றி சிந்தித்து, நேரம் எடுத்து நடித்த படம் சந்திரமுகி. வேட்டையன் இண்ட்ரோ சீன் ஒரு விதமாக அமைக்கப்பட்டது.




சந்திரமுகி ஒரு கிராமத்தில், நடனம் ஆடி கொண்டிருக்கும் போது, லக லக லக என்ற ஓசை வரும். என்னவென்று திரும்பினால் வேட்டையன் போல் 7 நபர்கள் வருவார்கள். அவர்கள் அனைவரும் விலக நான் வருவது போல் கதை அமைக்கப்பட்டது. இப்படி படம் பிடிக்கப்பட்டால், சந்திரமுகியை மறந்து விட்டு வேட்டையனை நியாபகம் வைத்து கொள்வார்கள்.


3 நிமிடத்தில், நல்ல நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். 15 -16 ஷாட் எடுத்தோம், ஒவ்வொன்றையும் வேறுவிதமாக எடுத்தோம். அதற்காக 20 நாட்கள் பயிற்சி எடுத்துக்கொண்டேன். மன்னர் ஔரங்கசீப்பின் சேனாதிபதி படையில் அறவானிகள் இருந்தனர், அவர்கள் அப்படி இருந்தும் வீர தீர சாகசங்கள் புரிந்தனர். அதை பார்த்து வியந்தேன்.  அப்போது, வேட்டையன் அறவானி அல்ல அறவானி போல பாவனை கொண்டு  நடித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து அந்த கதாப்பத்திரத்தில் நடித்தேன்” என்று கூறினார்.






சிறு வயதில் இப்படத்தை பார்த்த சில 90s கிட்ஸ்களும் 2k கிட்ஸ்களும் சந்திரமுகி, பேய் படமல்ல அது ஒரு சைகலாஜிக்கல் த்ரில்லர் படம்  என்ற உண்மையை இப்போதுதான் உணர்கின்றனர். இப்போதுதான் ஒரு படத்தில் பல நட்சத்திரங்களை நடிக்க வைத்து அதை பான் இந்திய படம் என்றும் சொல்லும் கலாச்சாரம் வளர்ந்து வருகிறது. மிஞ்சிப்போனால், மணிரத்தினத்தின் படங்களில்  பெரிய நடிகர்கள் பலர் நடிப்பார்கள்.


ஆனால் அப்போதே பல நட்சத்திர பட்டாளம் நடித்த படம்  சந்திரமுகி. அதுதான் இப்படத்தின் மற்றொரு ஹைலைட். இப்படம், பல மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு இருந்தால், அப்போதே பொல்லாத பான் இந்திய சம்பவத்தை செய்திருக்கும் சந்திரமுகி!