ரஜினிகாந்த்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதான தாதா சாகேப் பால்கே விருது நேற்று வழங்கப்பட்டது. 45 ஆண்டுகள் கலை சேவைக்காக அவருக்கு இந்த விருதை துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ரஜினியிடம் வழங்கினார். ரஜினிக்கு விருது வழங்கும்போது அரங்கில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டினர். இந்நிலையில் பால்கே விருதுக்கு பிறகு ரஜினி பதிவிட்ட முதல் ட்வீட்டில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில், ''என்னை நெஞ்சார வாழ்த்திய அரசியல் தலைவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அனைத்துத் துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தற்பாலின ஈர்ப்பு விளம்பரத்தை நீக்கிய டாபர்: அமைச்சர் எச்சரிக்கைக்கு பணிந்தது!
முன்னதாக, சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு 2019ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக அவருக்கு அப்போது விருது வழங்காத சூழல் நிலவியது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் இந்த ஆண்டு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்திய சினிமாவில் உச்ச விருதாக கருதப்படும் இவ்விருதை இதற்கு முன் செவாலியே சிவாஜி கணேசன், இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர், நடிகர் அமிதாப் பச்சன் பெற்றிருக்கின்றனர். தமிழில் சிவாஜி, பாலச்சந்தருக்கு பிறகு ரஜினிகாந்த் இவ்விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதை பெற்றுக்கொண்ட பின் பேசிய ரஜினிகாந்த், “தாதா சாகேப் பால்கே விருது வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. இந்த விருதை என் குருநாதர் பாலச்சந்தர், என் நண்பர் ராஜ் பகதூர், அண்ணன் சத்யநாராயணா என்னை இயக்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், என்னுடன் பணிபுரிந்தவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். என்னை வாழ வைக்கும் தமிழ் மக்களுக்கு நன்றி. தமிழ்நாடு மக்கள்தான் இந்த விருதுக்கு காரணம்”என்றார்.
விருது வழங்குவதற்கு முன்பாக ரஜினிகாந்த்தின் பயணத்தை நினைவுகூரும் விதத்தில் வீடியோ ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில், அமிதாப் பச்சன், மோகன்லால், ஏ.ஆர். ரஹ்மான், குஷ்பூ, கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்டோர் ரஜினியை புகழ்ந்து பேசினர்.