இந்திய கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வருகிறது. நாளை நடைபெறும் பயிற்சி போட்டியில் இந்திய அணி களமிறங்க உள்ளது. இந்தச் சூழலில் வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதேபோல் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஶ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க பிசிசிஐ ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்து.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் வீரர் ராகுல் திராவிட் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விண்ணப்பங்களில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பம் மட்டும் வரும் 26ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் தற்போது ராகுல் திராவிட் இதற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேட்டிங் பயிற்சியாளர், ஃபீல்டிங் பயிற்சியாளர், பந்துவீச்சு பயிற்சியாளர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்த இரண்டு நாட்களுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியுடன் டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. ஆகவே அந்த தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் தேர்வாகி விடுவார் என்று கூறப்படுகிறது. ஒரு வேலை பயிற்சியாளர் பதவிக்கு ஒருவர் மேல் விண்ணப்பம் செய்தால் அவரை தேர்வு செய்ய ஒரு சிஏசி குழு அமைக்கப் படும். அந்தக் குழு நேர்காணல் நடத்தி இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்யும்.
தற்போது ராகுல் ட்ராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணியாற்றி வருகிறார். அந்தப் பதவிக்கு மற்றொரு இந்திய முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லக்ஷ்மண் தேர்வாகலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் ஃபில்டிங் பயிற்சியாளர் பதவிகளுக்கு அவருடன் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பணியாற்றிய பாராஸ் பாம்ப்ரி மற்றும் அபேய் சர்மா ஆகிய இருவரும் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகவே தேசிய கிரிக்கெட் அகாடமியில் வேலை செய்த குழு இந்திய கிரிக்கெட் அணியிலும் திராவிட் உடன் வேலை பார்க்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியின் போது ராகுல் திராவிட் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரை சந்தித்து பேசியதாக கூறப்பட்டது. அப்போது இதுகுறித்து திராவிட் இடம் கலந்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும் படிக்க:இது சரியா, தவறா.? முழு பிஸினஸாக மாறும் ஐபிஎல்.. என்ன சொல்லப்போகிறது எதிர்காலம்?