லால் சலாம் படத்தின் ரிலீஸை முன்னிட்டு சென்னையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகியுள்ளது. 


நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, நீண்ட இடைவெளிக்குப் பின் “லால் சலாம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் “மொய்தீன் பாய்” என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். முதன்மை கேரக்டரில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் நிரோஷா, ஜீவிதா, செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தன்யா பாலகிருஷ்ணா, அனந்திகா சனில் என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டரில் வெளியாகிறது. 


இந்த படத்தில்  முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்வும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.  1992 ஆம் ஆண்டு நடைபெறுவதாக காட்டப்பட்டுள்ள லால் சலாம் படத்தின் கதையானது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கற்பனை கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 26 ஆம் தேதி லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய ரஜினிகாந்த், தன்னுடன் நடிகர் விஜய்யை ஒப்பிட்டு பேசப்படும் சர்ச்சைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார். 






இதேபோல் இயக்குநர் ஐஸ்வர்யாவும், தன்னுடைய அப்பா ரஜினியை எல்லாரும் சங்கி என அழைக்கிறார்கள். அவர் எல்லா மதத்தையும் விரும்பக்கூடியவர் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் லால் சலாம் படத்தின் ட்ரெய்லர் நேற்று இரவு வெளியானது. முதலில் 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் 7 மணி என சொல்லப்பட்டு கடைசியாக இரவு 9.30 மணிக்கு ட்ரெய்லர் வெளியானதால் காத்திருந்த ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். அதேசமயம் ட்ரெய்லர் சிறப்பக வந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில் லால் சலாம் படத்தின் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. தியேட்டர்களில் பேனர்கள் வைக்கப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் ஆங்காங்கே போஸ்டர்களும் ஒட்டப்பட்டு வருகிறது. இதில் ஒரு போஸ்டரில் “மும்மதமும் எங்களுக்கு முதல் மதமே” என கேப்ஷனோடு அடிக்கப்பட்டுள்ள போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ரஜினி மதம் சார்ந்து பேசுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் அதற்கு அவரது ரசிகர்கள் போஸ்டர்கள் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர்.