Britain's King Charles: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் எந்த வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வழங்கப்படவில்லை.


பிரிட்டன் மன்னருக்கு புற்றுநோய் பாதிப்பு:


கிங் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. அவரது உடல்நிலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், இது புரோஸ்டேட் புற்றுநோய்  அல்ல, மாறாக விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட்டுக்கான அவரது சமீபத்திய சிகிச்சையின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயின் சரியான தன்மை தொடர்பான தகவல்கள் எதுவும் வழங்கப்படாவிட்டாலும்,  பாதிப்பிற்கான "வழக்கமான சிகிச்சையை" மன்னர் தொடங்கினார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை விளக்கமளித்துள்ளது. சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், அரசர் தனது சிகிச்சையைப் பற்றி முற்றிலும் நேர்மறையாக கருதுவதாகவும், விரைவில் முழு பொதுப் பணிக்குத் திரும்புவதை எதிர்நோக்குகிறார்" என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.


மன்னர் பணிகளை தொடர்வது யார்?


புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதை தொடர்ந்து, மன்னர் சார்லஸ் தனது பொதுப் பணிகளில் இருந்து தற்காலிகமாக பின்வாங்குவார் என கூறப்படுகிறது. அவரது சிகிச்சையின் போது அரச குடும்பத்தின் மற்ற மூத்த உறுப்பினர்கள், மன்னரின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், 75 வயதான மூன்றாம் சார்லஸ் விரைந்து குணமடைய வேண்டும் என, பொதுமக்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






சார்லஸ் வாழ்க்கை பயணம்:


இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது 96-வது வயதில் காலமடைந்ததை அடுத்து, இங்கிலாந்தின் மன்னராக 3-ம் சார்லஸ் கடந்த ஆண்டு மே மாதம் முடிசூட்டப்பட்டார். தனது 74வது வயதில் மன்னராக பொறுப்பேற்றதன் மூலம், இங்கிலாந்து அரியணையில் ஏறிய மிக வயதான மன்னர் என்ற பெருமையை சார்லஸ் பெற்றார். இந்நிலையில், அவர் மன்னராக பொறுப்பேற்று ஓராண்டு முடிவதற்குள்ளாகவே, சார்லஸிற்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது பிரிட்டன் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


குழந்தை பருவத்தில் இருந்து அரண்மனையில் வளர்ந்தாலும், பாரம்பரிய முறைப்படி இவர் தனது கல்வியை அரண்மனையில் கற்கவில்லை. பள்ளிக்கு சென்று கல்வி பயின்றார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரிக்கு சென்று வரலாற்று பாடத்தில் கடந்த 1970-ம் ஆண்டில் பட்டம் பெற்றார். பல்கலைகழகத்திற்கு சென்று பட்டம் பெற்ற அரசு குடும்பத்தைச் சேர்ந்த முதல் நபர் சார்லஸ் ஆவார்.


பின்னர் இங்கிலாந்தின் ராயல் விமானப்படையில் 7 ஆண்டுகள் பைலட்டாக பணி புரிந்தார். அதன்பின் கடற்படையில் ஹெலிகாப்டர் பைலட்டாக பணியாற்றினார். இங்கிலாந்து கடற்படையின் எச்எம்எஸ் பிரானிங்டன் என்ற கண்ணிவெடி அகற்றும் கப்பலின் கமாண்டராகவும் பணியாற்றினார். 1976-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.