நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் இன்று வெளியான நிலையில், முதல் நாள் முதல் காட்சிக்கு சென்ற ரசிகர்கள் படம் குறித்த வீடியோக்களை வெளியிட்டு வருவது பிற ரசிகர்களை அதிருப்திக்குள்ளாகியுள்ளது.
மாஸ் காட்டிய ஜெயிலர்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 169வது படமாக உருவான ‘ஜெயிலர்’ படம் இன்று (ஆகஸ்ட் 10) தியேட்டரில் வெளியானது. உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சரவணன், யோகிபாபு, தமன்னா, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகம், வசந்த் ரவி, மிர்னா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
சாதனைப் படைத்த டிக்கெட் முன்பதிவு
ஜூலை மாதத்தில் இருந்து ஜெயிலரின் பாடல்கள் வெளியாக தொடங்கியது முதலே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆடியோ வெளியீட்டு விழா மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ட்ரெய்லர் ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது பிற ரசிகர்களின் ஆர்வத்தையும் தூண்டியது.
இதனிடையே கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜெயிலர் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இதுவரை உலகளவில் 1 கோடிக்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளது. இதன்மூலம் தான் என்றுமே சூப்பர் ஸ்டார் என ரஜினி மீண்டும் நிரூபித்துள்ளதாக அவரது ரசிகர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர். அதேசமயம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் மட்டும் 900 ஸ்க்ரீனில் ஜெயிலர் படம் திரையிடப்படுகிறது.
சல்லி சல்லியாக நொறுக்கிய ரசிகர்கள்
இப்படியான நிலையில் தமிழ்நாட்டில் ஜெயிலர் படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் திரையிடப்படுகிறது. ஆனால் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் அதற்கு முன்னதாகவே வெளியாகிவிட்டதால் சமூக வலைத்தளங்கள் முழுக்க ஜெயிலர் படத்தின் அப்டேட்டுகள் தான் நிறைந்துள்ளது.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினி என்கிற டைட்டில் தொடங்கி, ஜெயிலர் பட டைட்டில், ஸ்கிரீனில் என்னவெல்லாம் நடக்கிறதோ அப்படியே வீடியோ போட்டோகளாக அப்லோட் செய்யப்பட்டு வருகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்து விடும் என ரஜினி ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.