நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உன் மவனும் பேரனும்… ஆட்டம் போட வைப்பவன்
எந்திரன், பேட்ட, அண்ணாத்த ஆகிய படங்களுக்குப் பின் நடிகர் ரஜினிகாந்த் சன் பிக்சர் தயாரிப்பு நிறுவனத்துடன் 4வது முறையாக இணைந்துள்ள படம் “ஜெயிலர்”. நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் இன்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சரவணன், யோகிபாபு, தமன்னா, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகம், வசந்த் ரவி, மிர்னா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
தியேட்டர்களில் விடிய விடிய கொண்டாட்டம்
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு ஜூன் மாதத்தில் முடிவடைந்தது. ஜூலை மாதத்தில் இருந்து படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளாக வர தொடங்கியது. பாடல்கள், ட்ரெய்லர் அனைத்தும் பட்டையை கிளப்பிய நிலையில், ஆடியோ வெளியீட்டு விழா இன்னும் ஒருபடி மேலே போய் ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்தியது. இதனால் எப்போது ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.
நாட்கள் நெருங்க நெருங்க, படத்தின் கொண்டாட்டங்கள் ஆரம்பாகின. தமிழ்நாட்டில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படாததால் காலை 9 மணிக்கே முதல் காட்சி தொடங்குகிறது. அதேசமயம் பிற மாநிலங்களில் காலை 6 மணிக்கு முதல் காட்சி ஆரம்பாகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள ரஜினி ரசிகர்கள் சோகத்தின் உச்சத்தில் உள்ளனர். இருந்தாலும் வழக்கம்போல ரஜினி படத்தை திருவிழா போல அனைத்து மாநில ரசிகர்களும் கொண்டாடினர்.
தியேட்டர் வளாகங்கள் முழுக்க தோரணங்கள், கட் அவுட்டுகள், பேனர்கள் என களைக்கட்டியுள்ளது. தமிழ்நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 900 ஸ்கிரீனில் ஜெயிலர் படம் திரையிடப்படுகிறது. முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. இப்படியான நிலையில் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ஜெயிலர் படம் வெளியாகியுள்ளது.
இதற்கான நள்ளிரவிலேயே தியேட்டரில் குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் தலைவர் படத்தை வரவேற்றனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.