நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படம் உலகமெங்கும் 400 கோடி வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரின் 169வது படமாக ஜெயிலர் வெளியாகியுள்ளது.  ரம்யா கிருஷ்ணன், மிர்னா, ரித்விக், மோகன்லால், சிவராஜ் குமார், சுனில் வர்மா, தமன்னா, ஜாக்கி ஷெராஃப் ,யோகிபாபு, விநாயகம், வசந்த் ரவி, யோகிபாபு, சுனில் என பலரும் நடித்துள்ள  இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். பிரமாண்ட பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 


தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி,கன்னடம் ஆகிய 5 மொழிகளில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஜெயிலர் படம் வெளியானது. நெல்சனின் திரைக்கதை, ரஜினியின் ஸ்டைல், அனிருத்தின் இசை என அனைத்தும் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனால் ஜெயிலர் படம் வெளியான நாள் முதல் பாக்ஸ் ஆபீஸில் வசூலை வாரிகுவித்து வருகிறது.  முன்னதாக பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் மக்களும் குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். 


மேலும் ரஜினிகாந்த் கடைசியாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்த நிலையில், அப்படம் சரியாக போகவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்த ரசிகர்களை  ஜெயிலர் படம் மிகப்பெரிய அளவில் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடப்பாண்டு மட்டும் அதிக பார்வையாளர்களை கொண்ட படங்களின் வரிசையில் ஜெயிலர் படமும் இணைந்துள்ளது.






இப்படியான நிலையில், ஜெயிலர் படம் தமிழ் சினிமாவின் அத்தனை வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளது. ஜெயிலர் படம் ரிலீசாகி இதுவரை 6 நாட்கள் முழுவதுமாக நிறைவடைந்துள்ள நிலையில், எல்லா காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளது. இதனால் ஜெயிலர் படம் உலகளவில் ரூ.400 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல் இந்தியாவில் ரூ.200 கோடிக்கும் மேல் ஜெயிலர் படம் வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்து வருகிறது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை அடுத்தடுத்து விடுமுறை தினங்கள் வந்ததால் வசூல் எகிறியது. 


இதற்கு முன்னால்  ரஜினியின் 2.O மற்றும் கபாலி ஆகிய படங்களும், பொன்னியின் செல்வன் மற்றும் விக்ரம் படங்கள் மட்டுமே தமிழ் சினிமா வரலாற்றில் ரூ.400 கோடியை கடந்துள்ள நிலையில் அதில் ஜெயிலர் படமும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.