80களில் இருந்த தமிழ் சினிமாவுக்கும் இன்றைய சினிமாவுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளது. குறிப்பாக அந்த காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் காட்சிப்படுத்தப்பட்ட குடும்ப கோட்பாடுகள், சமுதாய கட்டமைப்பு இவை அனைத்துமே வேறுபட்டதாகவே இருந்தது. சினிமா மூலம் தான் அன்றைய சூழல், மக்களின் பழக்க வழக்கங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் உள்ளிட்ட பல விஷயங்களையும் பற்றின புரிதல் இன்றைய தலைமுறையினருக்கு தெரியவருகிறது. அதனால் அன்றைய திரைப்படங்களை நாம் அந்த காலகட்டத்துக்கு நம்மை கடத்திச்சென்று பார்க்கவேண்டியது அவசியம்.
அந்த வகையில் திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு. அதில் ஒரு சறுக்கல் ஏற்பட்டால் அது இருபாலருக்குமே வாழ்நாள் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது. அதன் பார்வையை அழகாக கடத்திய திரைப்படம் 'எங்கேயோ கேட்ட குரல்'.
41 ஆண்டுகள் நிறைவு :
வசூல் சக்கரவர்த்தியாக தமிழ் சினிமா கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த் தான் உச்சத்தில் இருந்த சமயத்திலேயே சற்றும் ஒரு தயக்கமின்றி திருமண தோல்வி அடைந்த ஒரு ஆண் கதாபாத்திரத்தில் நடித்து நட்சத்திர அந்தஸ்து கெட்டுவிடும் என இருந்த பிம்பத்தை உடைத்து எறிந்தார். தனது ஆஸ்தான இயக்குனர் எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் 1982ம் ஆண்டு வெளியான இப்படம் இன்றுடன் 41 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
கதை சுருக்கம் :
கிராமத்து விவசாயி கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்த அவருக்கு ஜோடியாக அம்பிகாவும், ராதாவும் நடித்திருந்தனர். மகளாக அமுல் பேபி மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். சொந்த அத்தை மகள் அம்பிகாவை திருமணம் செய்து கொள்கிறார். ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என விருப்பப்படும் அவளுக்கு ஒரு சாதாரண வாழ்க்கை அமைந்ததால் நிறைவான வாழ்க்கை வாழமுடியாமல் பெண் குழந்தைக்கு தாயான போதும் ஈடுபாடு இல்லாமல் தத்தளிக்கிறாள். ஒரு கட்டத்தில் தான் வேலை செய்து வந்த செல்வந்தரின் மகனுடன் ஊரைவிட்டு ஓடுகிறாள். ஊர் பஞ்சாயத்து அவளை தள்ளி வைக்கிறது.
மச்சினிச்சி ராதாவை திருமணம் செய்து வைக்க ரஜினியின் வாழ்க்கையிலும் உள்ள மன காயம் சரியாகிறது. காலங்கள் உருண்டோட தன்னுடைய தவறான முடிவை எண்ணி மனக்குமுறலில் ஊர் திரும்புகிறாள் அம்பிகா. தாய் பாசம் அம்பிகாவுக்கு பிறக்க குழந்தையை கொஞ்ச மனம் ஏங்குகிறது. அக்கா மீது இருக்கும் பாசத்தை விடவும் அவள் செய்த துரோகமே ராதாவின் கண்களுக்கு முன்னாடி வந்து நிற்க மகளை கண்டிக்கிறாள்.
காலங்கள் உருண்டோடுகிறது, அம்பிகா இறுதி கட்டத்தை நெருங்க அவளுக்கு இருந்த இரண்டு ஆசைகள் நிறைவேறியதா இல்லையா என்பது தான் படத்தின் கதைக்களம்.
நேச்சுரலான ரஜினிகாந்த்:
ரஜினிகாந்த் வழக்கமான ஸ்டைல், மாஸ் படமாக இல்லாமல் மிகவும் நேச்சுரலா நடித்த படம். இளமைப்பருவம், நடுத்தர வயது, முதுமை தோற்றம் என அனைத்து கட்டத்திலும் முதிர்ச்சியான நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தி அசத்திய திரைப்படம். அம்பிகா ஆடம்பரத்திற்காக கிடைத்த அமைதியான நல்ல வாழ்க்கையை தொலைத்த கதாபாத்திரத்தில் ஒரு பாதியில் ஆத்திரத்தையும் மறு பாதியில் பரிதாபத்தையும் ஏற்படுத்தி ஜொலித்தார். இப்படம் அவரின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் ராதாவின் பாந்தமான நடிப்பில் மிளிர்ந்தார்.
இசையில் மயக்கிய இளையராஜா :
இசைஞானி இளையராஜாவின் இசையில் பட்டு வண்ணச் சேலைக்காரி, ஆத்தோரம் காத்தாட ஒரு பாட்டு தோணுது போன்ற பாடல்கள் காதுகளில் தேனாக, கண்களுக்கு குளிர்ச்சியாக அமைந்தது. படத்தில் வசனங்களுக்கு திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்த்தது.
விருப்பமில்லாத திருமணம், சபலத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றின யதார்த்தங்களை உரக்க சொன்ன 'எங்கேயோ கேட்ட குரல்' படத்தின் குரல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஒலித்து கொண்டே தான் இருக்கும்.