காந்தாரா திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் படத்தை புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். 


 


ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரமாண்ட படைப்புகளான கே.ஜி.எஃப்., கே.ஜி.எஃப்  2 படங்களை தொடர்ந்து சமீபத்தில் வெளியான படம் "காந்தாரா". ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 30ம் தேதி காந்தாரா படம் வெளியாகி திரையுலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அந்தப்படம் கொடுத்த தாக்கம் காரணமாக பிற மொழியைச் சேர்ந்தவர்களும் அப்படத்தைப் பார்க்க அதீத ஆர்வம் கொண்டிந்தனர். அதற்கேற்றாற்போல் காந்தாரா படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு கடந்த அக்டோபர் 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது. 


 






பழங்குடி மக்களுக்கும் பண்ணையாருக்குமான நிலப் பிரச்சனையை  மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படம் அரசு நிர்வாகம் நிலச்சுவான்தார்கள், பழங்குடி மக்கள் ஆகிய 3 பேரும் இடையேயான நில அரசியலை துல்லியமாக காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இப்படத்தை நடிகர்கள் கார்த்தி, தனுஷ், ப்ரித்விராஜ் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் பாராட்டினர். இந்த வரிசையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தும் இந்தப்படத்தை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். 


 






அந்தப்பதிவில், “ கற்றது கையளவு கல்லாதது உலகளவு ” சினிமாவில் இதை விட சிறப்பாக யாரும் சொல்ல முடியாது என்று தயாரிப்பு நிறுவனம் ஹோம்பலே நிறுவனத்தை பாராட்டி இருக்கும் ரஜினிகாந்த், காந்தாரா திரைப்படம் என்னை உற்சாகத்தின் உச்சத்தில் நிற்க வைத்திருக்கிறது.


படத்தை எழுதி இயக்கி, நடித்திருக்கும் ரிஷப் ஷெட்டிக்கு ஹாட்ஸ் ஆஃப். இப்படிப்பட்ட தரமான படத்தை கொடுத்த படக்குழுவினருக்கு என்னுடைய பாராட்டுகள்” என்று பதிவிட்டு இருக்கிறார்.  வெளியிடப்பட்ட அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்  காந்தாரா திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.   ‘காந்தாரா’  படத்தின் தாக்கம் காரணமாக கர்நாடக அரசு  60 வயதுக்கு மேற்பட்ட தெய்வ நர்த்தகர்களுக்கு  மாதம் ரூ.2000 வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.