நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரு பக்கம் ரசிகர்கள் ரஜினியைக் கொண்டாடி வர மறுபக்கம் இதில் மீம்களுக்கு ஏற்ற இடங்களை கண்டுபிடித்துள்ளார்கள் மீம் கிரியேட்டர்கள். ஜெயிலர் படத்தின் மூலமாக ஒரு முடிவடையாத ஒரு பழைய பிரச்சனையை தீர்த்து வைத்திருக்கிறார்கள் மீம் கிரியேட்டர்கள்.


ஜெயிலர்


சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆக்ஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷ்ராஃப், விநாயகன், யோகிபாபு, ஷிவ ராஜ்குமார் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.


படையப்பா நீலாம்பரி






ரஜினிகாந்த் ரம்யா கிருஷ்ணன் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது படையப்பா படம்தான். இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த வில்லன் கதாபாத்திரம் இன்று வரை பேசப்படும் கதாபாத்திரமாக இருந்து வருகிறது. மேலும் தான் ஆசைப்பட்டதை அடைந்துவிடும் நீலாம்பரி கதாபாத்திரம் கடைசி வரை தான் காதலித்த படையப்பாவை அடைய முடியாமலே உயிரிழந்தும் போவார். தற்போது இத்தனை ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தில் ரஜினியின் மனைவியாக ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். இதனைப் பார்த்த ரசிகர்கள் ஒரு வழியாக நீலாம்பரியும் படையப்பாவும் இணைந்துவிட்டார்கள் என்கிற மாதிரியான மீம்களை இணையதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.


வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் மாறல..


முன்னதாக ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசியது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.


 நிகழ்ச்சியில் மேடையில் ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருக்கையில் கீழே அமர்ந்திருந்த நடிகை ரம்யா கிருஷ்ணன் மேடைக்கு ஓடிச் சென்று, திடீரென  குறுக்கிட்டார். அவரிடம் இருந்து மைக்கை வாங்கிய ரம்யா கிருஷ்ணன், படையப்பா படத்தில் இருவருக்குமிடையேயான காட்சியில் இடம்பெற்ற பிரபலமான, “வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்கிட்ட தான் இருக்கும். கூடவே பொறந்தது. எங்கேயும் போகாது” என தெரிவிக்க ஒட்டுமொத்த நேரு ஸ்டேடியமும் ரசிகர்களின் கரவொலியால் அதிர்ந்தது.