இன்று ஒட்டுமொத்த இந்தியர்களால் கொண்டாடப்படும் நடிகர்களுள் ஒருவர் ரஜினிகாந்த். உலகம் முழுக்க ரஜினிகாந்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அறிமுகப்படுத்தியவர்தான் ரஜினிகாந்த்.


ரஜினியின் வளர்ச்சியிலும், வாழ்க்கையிலும் பாலச்சந்தருக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த நிலையில் பாலச்சந்தர் கூறிய அறிவுரையால்தான் நான் குடிப்பழக்கத்தை விட்டதாக நடிகர் ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். 







ரஜினிகாந்த் பேசியதாவது :


”ஒரு முறை பாலச்சந்தர் சாரின் உதவியாளர்களிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது . அதில் “ சார் உங்களை உடனடியாக கூப்பிடுறாங்க. ஒரு ஷார்ட் மிஸ் ஆயிடுச்சு அதை எடுக்கணும் . உடனே வாங்கன்னு சொன்னாங்க. நான் ஆடிப்போயிட்டேன், ஏன்னா நான் தண்ணி போட்டுருக்கேன்.  அதன் பிறகு குளிச்சு, பல் விளக்கி , ஸ்பிரேயெல்லாம் அடிச்சு போய் மேக்கப் போட்டு அப்படியே நிற்குறேன். நான் குடித்திருக்கும் விஷயம் பாலச்சந்தர் சாருக்கு தெரிய கூடாதுனு விலகி நின்னேன். ஆனாலும் அவருக்கு தெரிஞ்சு போச்சு.



பிறகு என்னை ரூமுக்கு அழைச்சுட்டு போனார். அப்படியே நான் ஆடிப்போயிட்டேன், அமைதியா உட்கார்ந்தேன் , அப்போ நாகேஷை தெரியுமானு கேட்டாரு.. தெரியும் சார்னு சொன்னேன்... எப்படிப்பட்ட நடிகன்னு தெரியுமான்னு கேட்டாரு ..தெரியும் சார்னு சொன்னேன். அவர் முன்னால நீ ஒரு எறும்புக்கூட இல்லை . மதுவால அவனே அவனுடைய வாழ்க்கையை இழந்துட்டான். இனிமே நீ ஷூட்டிங் சமயத்துல தண்ணி அடிச்சேன்னு பார்த்தாலோ அல்லது கேள்விப்பட்டாலோ செருப்பாலையே அடிப்பேன் அப்படினு சொன்னாரு. அன்னைக்கு முடிவெடுத்ததுதான் நான் ஜம்மு போன்ற குளிர் பிரதேசங்கள்ல ஷூட் நடந்தா கூட குடிச்சதே இல்லை“ என ஒளிவு மறைவில்லாமல் பகிர்ந்திருக்கிறார் ரஜினிகாந்த்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்திற்காக அவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படம் 2023 கோடை ஸ்பெஷலாக களமிறங்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க இருக்கும் இந்த திரைப்படங்களில் முதல் படத்தை டான் திரைப்படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாகவும் இரண்டாவது திரைப்படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.