சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் " அண்ணாத்த". இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இது படம் ரஜினியின் 166 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணாத்த கிராமத்துக்கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர்.
முத்து படத்திற்கு பிறகு ரஜினியுடன் அதிக நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் படம் " அண்ணாத்த " என கூறப்படுகிறது. படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் தங்கையாக நடிக்கிறார், முன்னணி நடிகை தங்கையாக நடிப்பதால் படம் நிச்சயம் அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டது என்பதில் சந்தேகமில்லை. ரஜினியின் 166 வது படமான "அண்ணாத்த" இந்த வருடம் தீபாவளி அன்று திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்துக்கான போஸ்ட் புரெடெக்ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் சூப்பர் ஸ்டாரை அடுத்து யார் இயக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கோலிவுட்டில் எகிறியுள்ளது.
இதற்கிடையே ரஜினியின் அடுத்த படத்தை யாரோ இளம் இயக்குநர் ஒருவருக்கு கொடுக்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்க, அப்படியானால் இவரா? அவரா? என ஒரு பெரும் பட்டியலே இணையத்தில் சுற்றி வருகிறது. அதிலும் குறிப்பாக ரஜினியின் அடுத்தப்படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், எந்திரன், பேட்ட, அண்ணாத்த ஆகிய படங்களையும் சன் பிக்சர்ஸ் தயாரித்தது. இந்நிலையில் ரஜினியின் 167 படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக தகவல். இந்தப்படத்தை இளம் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அல்லது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாகவும், இயக்குநரிடம் ரஜினி கதையை கேட்டுவிட்டதாகவும் தகவல் வேகமாக பரவியது.
இந்த தகவலைக் கேட்டதும் ரஜினி ரசிகர்கள் குஷியாகினர். இளம் இயக்குநர்கள் ரஜினியை சரியாக பயன்படுத்துவார்கள் என பதிவுகள் பறந்தன. இன்னும் சிலர் தாங்கள் தேசிங்கு பெரியசாமியிடம் வாட்ஸ் அப்பில் பேசியதாகவும், அவர் தான் இயக்குநர் என்றும் வாட்ஸ் அப் சாட்களை தட்டி விட்டனர். அரண்டு போன இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அதில், இது போன்ற வாட்ஸ் அப் தொடர்புகள் எதுவும் உண்மையில்லை. தயவுசெய்து யாரும் பொய்யை பரப்ப வேண்டாம். நன்றி என கேட்டுக்கொண்டுள்ளார்.
ரஜினியை அடுத்து யார் இயக்கபோவது என்ற விவரத்தில் பல கதைகள் உலவிக்கொண்டு இருந்தாலும், நிச்சயம் அவர் ஒரு இளம் இயக்குநர் என்று உறுதியாக கோலிவுட் பக்கத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. யார் தான் அடுத்து சூப்பர் ஸ்டாரை இயக்கவுள்ளாரோ என்ற எதிர்பார்ப்பிலும் ரசிகர்கள் காத்துக்கொண்டு உள்ளனர்.