நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற “முத்து” படம் இன்றோடு 28 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 


மலையாள ரீமேக்கில் ரஜினி 


தொடர்ந்து கமர்ஷியல் படங்களை இயக்கி வெற்றி பெற்ற இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருடன் ஒரு படத்தில் இணைய வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரும்பினார். அந்நேரம் மலையாளத்தில் 1994 ஆம் ஆண்டு  தென்மாவின் கொம்பத்தின் படம் வெளியாகி சக்கைப்போடு போட அதன் ரீமேக் உரிமை வாங்கப்படுகிறது. அதுவே “முத்து” படமாக உருவானது. 


இப்படத்தில் மீனா, சரத்பாபு, சுபஸ்ரீ, பொன்னம்பலம், ராதாரவி, வடிவேலு, செந்தில், விசித்ரா, ஜெய பாரதி, ரகுவரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்தார். 


படத்தின் கதை 


இந்த படத்தின் கதை மிகவும் எளிமையானது. ஜமீன்தார் சரத்பாபு வீட்டில் பணியாளாக இருக்கிறார் ரஜினிகாந்த். இருவருக்கும் மீனா மீது காதல் ஏற்படுகிறது. ஆனால் மீனா ரஜினியை தான் விரும்புகிறார். இந்த உண்மையை அறியாத சரத்பாபு, மாமா ராதாரவி செய்த சூழ்ச்சியால் ரஜினியை அடித்து துரத்துகிறார். ஆனால் மீனாவுக்கு  ரஜினியை தான் பிடித்துள்ளது என்ற உண்மையை சரத்பாபுவிடம் கூறுகிறார் அவரது அம்மா ஜெயபாரதி. அத்தோடு ரஜினி தான் இந்த ஜமீனின் வாரிசு என்ற உண்மையை போட்டுடைக்கிறார். அவர் ஏன் பணியாளாக நடத்தப்பட்டார் என்ற பிளாஷ்பேக் காட்சிகளோடு இப்படம் செல்லும்படி திரைக்கதை அமைக்கப்பட்டது. 


ஷாக் கொடுத்த கே.எஸ்.ரவிக்குமார் 


முத்து படத்திற்கு முதலில் “வேலன்” என பெயரிடப்பட்டது. தயாரிப்பாளர் கிடைக்காத காரணத்தால் முதலில் ரஜினியே சொந்தமாக தயாரிக்க முன்வந்தார். ரஜினிகாந்த் அந்தப் படத்தின் அவுட்லைனை விவரித்த நிலையில் ஒரிஜினல் படத்தை பார்க்காமலேயே திரைக்கதை எழுதியுள்ளார்.  ரமேஷ் கண்ணா உள்ளிட்ட உதவி இயக்குநர்களின் உதவியுடன் அவுட்லைனை முக்கால்வாசி ஸ்கிரிப்டை முடித்துவிட்டு தென்மாவின் கொம்பத் படத்தை பார்த்துள்ளார். ஆனால் எழுதிய திரைக்கதைக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிளாஷ்பேக் காட்சிகள் சேர்க்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன்பின்னர் இப்படத்தை கே.பாலசந்தர் தனது கவிதாலயா பேனரில் தயாரித்தார். 


ரஜினியுடன் நடிக்க மறுத்த பிரபலங்கள் 


முதலில் சரத்பாபு வேடத்தில் நடிக்க அணுகப்பட்டவர் அரவிந்த் சாமி. ஆனால் ரஜினி ரசிகரான தான் அவரை அடிக்கும் காட்சியில் நடித்தால் நன்றாக இருக்காது என தெரிவித்து நடிக்க மறுத்தார். தொடர்ந்து நடிகர் ஜெயராமும் அதே காரணத்தை சொல்லி நிராகரித்தார். இதனையடுத்து முள்ளும் மலரும், அண்ணாமலை, மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்ததால் இருந்த ஒரு நட்பின் அடிப்படையில் சரத்பாபுவை ரஜினி பரிந்துரைத்தார். 


இதேபோல் ஹீரோயினாக நடிக்க பெப்சி உமாவிடம் கேட்கப்பட்டது. தொடர்ந்து சுகன்யா அந்த வேடத்தில் நடிக்க வேண்டியது மிஸ் ஆனது. இதன் பின்னர் நடிகை மீனா ஹீரோயினானார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 


அரசியல் வருகையை சொல்லிய பாடல் வரிகள் 


ஏ.ஆர்.ரஹ்மானால் இசையில் முத்து படத்துக்கு அனைத்து பாடல்களும் முத்தாக அமைந்தது. தொடக்க பாடலான ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ தொடங்கி தில்லானா தில்லானா, கொக்கு சைவ கொக்கு, குலுவாலிலே, விடுகதையா உள்ளிட்ட அனைத்து பாடல்களும் இன்றும் பலரின் பிளே லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. இதில் குலுவாலிலே பாடலில் “கட்சியெல்லாம் இப்போது நமக்கேது, காலத்தின் கையில் அது இருக்கு” என அரசியல் வருகை குறித்து பதிவு செய்திருப்பார். 


அதுமட்டுமல்லாமல் “கெடைக்கறது கெடைக்காம இருக்காது. கெடைக்காம இருக்காது கெடைக்காது..”நான் எப்போது வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வார வேண்டிய நேரத்துல கரெக்டா வந்துடுவேன்” என பன்ச் வசனங்களையும் சரியாக வைத்து ஹிட்டடித்திருந்தார் ரஜினிகாந்த். இந்த படம் இந்திய மொழிகளில் மட்டுமல்லாது சீனாவிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது. அந்த காலக்கட்டத்தில் ஹாலிவுட்டில் சக்கைப்போடு போட்ட டைட்டானிக் படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது. அவருக்கு ஜப்பானில் தனி ரசிகர் பட்டாளமே உருவானது குறிப்பிடத்தக்கது.