காவிரி பிரச்சினையில் 5 அணைகளையும் ஆணையத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

மாநில சுயாட்சி பத்தி பேசும் திமுக தனக்கு அதிகாரம் இருந்தும் மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று கூறுவது ஏன்?

Continues below advertisement

நெல்லை பாளையங்கோட்டையில் தியாகி இமானுவேல் சேகரனார் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.  முன்னதாக அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தியாகி இமானுவேல் சேகரன் சுதந்திரப் போராட்ட வீரர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த அவருக்கு அரசு சார்பில் விழா நடத்தி இருக்க வேண்டும். தென் மாவட்டத்தில் அமைதி ஏற்பட தொழில் வளம் பெருக வேண்டும். வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும், இதனை பாமக தொடர்ச்சியாக சொல்லிக் கொண்டிருக்கிறது. சென்னை, கோயம்புத்தூர் போன்று இங்கு எந்த வளர்ச்சியும் கிடையாது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மணல், ஜல்லி, கற்கள் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்திச் செல்லப்படுகிறது. இதை தமிழக அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் கன்னியாகுமரியில் எனது தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

Continues below advertisement

தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உடனடியாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். சமீபத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் மத்திய அரசு நடத்தும் கணக்கெடுப்பின் போது தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து அதிகாரங்களும் உள்ளது. பீகாரில் இதை நிரூபித்து உள்ளார்கள், கணக்கெடுப்புக்கான அறிவிப்பு வெளியிட்டு தயாராகி விட்டார்கள். தமிழக அரசு இன்னும் ஏன் அறிவிப்பை வெளியிடவில்லை. மாநில சுயாட்சி பத்தி பேசும் திமுக தனக்கு அதிகாரம் இருந்தும் மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று கூறுவது ஏன்? கருணாநிதி இருந்திருந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி இருப்பார். எனவே உடனடியாக தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும். நீட் தேர்வு என்ன நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கம் தோல்வி அடைந்து விட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வை ரத்து செய்வதாக பொய் வாக்குறுதி கொடுத்தார்கள். தற்போது முயற்சி செய்வதாக கூறுகிறார்கள். வசதியானவர்கள் மட்டுமே இன்று மருத்துவம் படிக்க முடியும், ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள்  சேரும் சூழல் இன்று கிடையாது. நீட் பயிற்சி மையம் என்ற பெயரில் லட்சக்கணக்கான கோடிகள் கொள்ளையடிக்கப்படுகிறது. எனவே திமுக வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றவில்லை. பொய் வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். பல வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை, முக்கியமாக மின் கட்டணம். இதன் விலை ஏற்றப்பட்டதால் கட்ட முடியாத சூழலில் உள்ளனர். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் என சொன்னார்கள். அதை பற்றி மூச்சு பேச்சு இல்லை.

இலங்கை அரசு கடல் கொள்ளையர்களுக்கு ஆதரவு அளிக்கிறது. அவர்கள் தமிழக மீனவர்களை தாக்கி, கொள்ளை அடிக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. இதனை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியா இலங்கைக்கு உதவி செய்து என்ன பயன்? காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண ஒரே வழி தமிழக அரசு வேகமாக உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்.  வட இந்தியாவில் வக்ரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அனைத்து அணைகளுக்கும் ஒரு ஆணையம் உள்ளது. ஐந்து மாநிலங்களில் உள்ள அணைகளை இந்த ஆணையம் கட்டுப்படுத்துகிறது. அதேபோல் காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகள், தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணை ஆகியவற்றை காவிரி மேலாண்மை ஆணையத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.  கர்நாடக  அரசு உச்ச நீதிமன்றத்தையும், மத்திய அரசையும் மதிக்கவில்லை. காவேரி பிரச்சனை திமுக பிரச்சினை அல்ல. அது தமிழகத்தின் பிரச்சனை. இந்த பிரச்சனையில் அரசியல் செய்ய கூடாது. இவ்வாறு அவர் கூறினார்

Continues below advertisement
Sponsored Links by Taboola