தற்போதைய இளம் இயக்குநர்கள் நடிகர்களின் கம்ஃபர்ட் ஸோனை உடைக்க துவங்கியிருக்கிறார்கள் . தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்கள் என கொண்டாடப்படும் விஜய் , அஜித், ரஜினிகாந்த் , கமல்ஹாசன் என ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான யுனிக்னஸ் இருக்கிறது. இதில் சகலகலா வல்லவர் கமல்ஹாசனை சேர்க்க தேவையில்லை. மற்ற நடிகர்களின் படங்களில் மாஸ், அதிரடி, உச்ச நட்சத்திரங்கள் பிறகு கமர்ஷியல் வெற்றி நிச்சயமாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது அந்த ஃபார்மட்டில் இருந்து அவர்கள் மெல்ல மெல்ல வெளிவர துவங்கிவிட்டார்கள் . காரணம் இந்த தலைமுறை ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்பது வேறாக இருக்கிறது. சமீபத்தில் கோலேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படம் மூலம், கமல்ஹாசனை ஒரு ரசிகராக எப்படி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டாரோ அதை நிறைவேற்றிக்காட்டினார். விளைவு கமலின் இதுநாள் வரை திரைப்படங்கள் ஈட்டாத வசூலை வாரிக்கொடுத்தது. இப்படி கோலிவுட்டில் சில முன்னணி  நடிகர்களுடன் சில இளம் இயக்குநர்களின் காம்போ எப்படி இருக்கும் என என்றாவது யூகித்திருக்கிறீர்களா ?


ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் 


லோகேஷ் விக்ரம் படத்திற்காக கமல்ஹாசனை அனுகுவதற்கு முன்னால், வேறு ஒரு கதைக்காக ரஜினிகாந்தை அனுகியிருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு தொடங்குவதாக இருந்த இந்த திரைப்படம், கொரோனா, ஊரடங்கு , ரஜினியின் உடல்நிலை என தள்ளிபோனது. இதனால் லோகேஷும் விக்ரமில் களமிறங்கிவிட்டார். இந்த சூழலில் அந்த படம் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். அப்படி அது நிறைவேறினால் இதுவரையில் திரையில் காணாத ரஜினிகாந்தை காண ரசிகர்கள் எதிர்பார்ப்பின் உச்சத்தில் இருப்பார்கள். மிகப்பெரிய வெற்றிப்படம் ஒன்றை கொடுத்துவிட்டு சினிமாவிலிருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்பதுதான் சூப்பர் ஸ்டாரின் விருப்பமும் கூட !




அஜித் - மணிரத்தினம் 



1995 ஆம் ஆண்டு வெளியான ஆசை திரைப்படத்தை மணிரத்தினம்தான் தயாரித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித்தின் நீண்ட நாள் ஆசை , மணிரத்தினம் படத்தில் நடிக்க வேண்டும் என்பதுதான். அதை அவரே சில மேடைகளிலும் தெரிவித்திருக்கிறார். இது குறித்து மணிரத்தினத்திடம் கேட்டும் அவர் அஜித்தை இன்னும் ஒப்பந்தம் செய்யவில்லை என்கிறது சில தகவல்கள் . எது எப்படியோ ! இந்த கூட்டணியும் ரசிகர்களின் விருப்ப பட்டியலில் ஒன்றாகத்தானே இருக்கிறது!




விஜய் - கௌதம் வாசுதேவ் மேனன் :



விஜய் - கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியிட திட்டமிடப்பட்டிருந்த திரைப்படம் “ யோகன் - அத்யாயம் ஒன்று “ . இந்த திரைப்படம் ஒரு கிரைம் சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாக இருந்தது. ஆனால் படப்பிடிப்பின் இடையிலேயே விஜய்க்கும் , ஜிவிஎம்மிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு  விஜய் படத்திலிருந்து விலகினார். இது குறித்து கௌதம் வாசுதேவ் மேனன் கூறுகையில் , இந்த திரைப்படம் விஜய்யின் கம்ஃபர்ட் ஸோனுக்கு வெளியே இருப்பதாக அவர் உணர்ந்து வெளியேறினார் என்றார்.இப்போது விஜய் தனது கம்ஃபர்ட் ஸோனுக்கு வெளியே படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார். ஒருவேளை அவர் பச்சை கொடி அசைத்தால் அந்த படத்தை மீண்டும் இயக்க கௌதம் வாசுதேவ் மேனனும் தயார் ! ரசிகர்களும் கொண்டாட தயார்!