ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,தியேட்டர்கள் இப்போதே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்தின் 169வது படமாக ஜெயிலர் படம் உருவாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மோகன்லால், விநாயகன், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள், ட்ரெய்லர் என அனைத்தும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. கடந்த ஜூலை 28 ஆம் தேதி ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நடைபெற்றது. இது ஆகஸ்ட் 6 ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிற வைத்தது.
மேலும் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கியது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ,மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தின் டிக்கெட் முன்பதிவு எதிர்பார்த்ததை விட பல மடங்கு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதும். மேலும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் படத்தின் வசூல் மிகப்பெரிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே ஜெயிலர் ரிலீசுக்கு இன்னும் 1 நாள் மட்டுமே உள்ள நிலையில், தியேட்டர்கள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. போஸ்டர், பேனர்கள், கட் அவுட்கள் என களைக்கட்ட தொடங்கியுள்ளது. மேலும் முதல் நாள் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்த நிலையில், வார நாட்களில் படம் வருவதால் பலரும் எப்படியாவது முதல் நாளே பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு என்ன சொல்லி லீவு கேட்பது என விழிபிதுங்கி வருகின்றனர்.
இப்படியான நிலையில் சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு ஜெயிலர் படம் வெளியாகும் ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று விடுமுறை விடுவதாக அறிவித்துள்ளது. லீவு தொடர்பான கோரிக்கைகள் அதிகளவில் குவிவதால் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் சில நிறுவனங்கள் தனது ஊழியர்களுக்கு 'ஜெயிலர்' டிக்கெட்டுகளை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.