'அண்ணாத்த' திரைப்படத்திற்கு பிறகு தற்போது ரஜினிகாந்த் 'ஜெயிலர்' திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'லால் சலாம்' திரைப்படத்தில் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இப்படி பிஸியாக படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் ரஜினிகாந்த் போட்ட ஒரு கையெழுத்து இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
கமலை தொடரும் ரஜினி :
நடிகர் ரஜினிகாந்த், ஒரு கோடி கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஏற்கனவே தமிழ் சினிமா நடிகர்களான கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி இந்த இயக்கத்தில் இணைந்ததை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்தும் அதற்கு ஆதரவளித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதரவு தெரிவிக்கும் பிரபலங்கள் :
தமிழ்நாடு முழுவதிலும் போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யா தொடங்கிய இந்த இயக்கம் கடந்த மாதம் 12ம் தேதி தொடங்கப்பட்டது. போதையில தமிழ்நாடு என்ற முழக்கத்தோடு மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த இயக்கத்திற்கு பொதுமக்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள் பலரும் அவர்களின் ஆதரவை கையெழுத்தின் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.
ட்ரெண்டிங் செய்யும் ரஜினி ரசிகர்கள்:
1 கோடி கையெழுத்து இயக்கம் வரும் பிப்ரவரி 27ம் தேதி முடிவடைய உள்ளது. ஏற்கனவே நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி இந்த போதையில்லா தமிழக இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து விட்ட நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தும் இந்த இயக்கத்திற்கு ஆதரவை கையெழுத்திட்டு தெரிவித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தனது ட்விட்டர் பக்கம் மூலம் "போதையற்ற தமிழ்நாடு முழக்கத்தினை முன்வைத்து DYFI நடத்தும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கையெழுத்திட்டு வாழ்த்தினார். மிகச்சிறந்த பணிக்கு எனது வாழ்த்துக்கள் என வழியனுப்பினார்" என இந்த தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டுக்கு லைக்ஸ்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. ரஜினி ரசிகர்கள் இந்த பதிவை ஹாஷ்டேக் செய்து ட்ரெண்டிங்காக்கி வருகிறார்கள்.
அன்பால் திருத்திய மனைவி :
ஒரு காலத்தில் சிகரெட்டை விதவிதமாக ஸ்டைலாக பிடிப்பதில் மாஸ் காட்டியவர் ரஜினிகாந்த். ஆனால் சிவாஜி படத்தில் இருந்து அவர் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதில்லை. தனது இளமை பருவத்தில் குடி, சிகரெட் என ஆட்டம் ஆடியவரை தனது அன்பாலே நிறுத்தியவர் தனது மனைவி லதா ரஜினிகாந்த் என அவரே பல மேடை நிகழ்ச்சிகளில் பேசியுள்ளார். அந்த வகையில் ஜனநாயக வாலிபர் சங்கம் தொடங்கிய இந்த ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தில் தன்னுடய ஆதரவை தெரிவித்ததில் மகிழ்ச்சியடைந்துள்ளார்.