தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களான விஜய், அஜித் இருவரது படங்களையும் நடிகை சாய் பல்லவி நிராகரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.


க்ளாமர் என்பதே அறவே இல்லாமல், மலையாளம், தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயினாக கோலோச்சி சமீப காலமாக கவனமீர்த்து வருபவர் நடிகை சாய் பல்லவி.


தெலுங்கில் டாப் ஹீரோயின்


முக்கியமாக தெலுங்கு சினிமாவில் கிளாமர் தவிர்த்து ஒரு நடிகை கோலோச்ச முடியாது எனும் நிலையைத் தகர்த்து சாய் பல்லவி டாப் ஹீரோக்கள் ஜோடி சேர போட்டி போடும் நடிகையாக வலம் வருகிறார்.


மலையாள சினிமாவில் ப்ளாக் பஸ்டர் வெற்றி பெற்ற பிரேமம் படம் மூலம் அறிமுகமான சாய் பல்லவி ஏற்கெனவே தெலுங்கு ரசிகர்களை சின்னத்திரை நடன நிகழ்ச்சிகள் மூலம் ஈர்த்திருந்தார். மேலும், தாம் தூம், கஸ்தூரி மான் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் சாய் பல்லவி சிறு வயதில் தலைக்காட்டியுள்ளார்.


தேர்ந்தெடுத்த படங்கள்


தொடர்ந்து பிரேமம் படத்தில் மலர் எனும் தமிழ் பெண்ணாகத் தோன்றி தமிழ், மலையாளம் என இருதரப்பு ரசிகர்களின் மனங்களையும் கவர்ந்து கவனமீர்த்தார்.


அதன் பின் மலையாளத்தில் கலி, தெலுங்கில் ஃபிடா, ஷ்யாம் சிங்கா ராய், லவ் ஸ்டோரி, தமிழில் தியா,
கார்கி என தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்த சாய் பல்லவி கிளாமர் அறவே இல்லாமல், தன் நடிப்புத் திறமை, நடனம், எளிமையான தோற்றம் ஆகியவற்றால் முன்னணி நடிகையாக வலம் வர முடியும் என்பதை நிரூபித்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.


விஜய், அஜித் படங்களை நிராகரித்தாரா?


இந்நிலையில், தமிழில் இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்த வாரிசு, மற்றும் முந்தைய அஜித் படமான வலிமை இரண்டு படங்களிலும் ஹீரோயினாக நடிக்க  சாய் பல்லவி அணுகப்பட்டாதகவும் ஆனால் இரண்டு படங்களையும் அவர் நிராகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை சாய் பல்லவி தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் இந்த இரண்டு படங்களில் ஹீரோயின் பாத்திரங்களிலும் திருப்தி அடையாததால் சாய் பல்லவி இப்படங்களை நிராகரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் வாரிசு, வலிமை இரண்டு படங்களுமே டீசண்டான கலெக்‌ஷனை அள்ளிய நிலையில், இந்தப் படங்களின் வாய்ப்பை நிராகரித்தது குறித்து சாய் பல்லவி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.


இறுதியாக நாக சைதன்யாவுடன் தெலுங்கில் சாய் பல்லவி நடித்த லவ் ஸ்டோரி படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அடுத்ததாக சாய் பல்லவி சிவகார்த்திகேயனுடன் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.