தமிழ் சினிமாவின் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் என என்றென்றும் கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இன்றும் அதே இளமையுடனும், சுறுசுறுப்புடனும் சுழலும் நடிகர் ரஜினிகாந்த், இன்றைய நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருவதுடன் கைவசம் ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகியும் உள்ளார்.
கடந்த ஆண்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான 'ஜெயிலர்' படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து ரஜினிக்கு நல்லதொரு கம்பேக் படமாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். தற்போது ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' திரைப்படமும் முழுவீச்சில் உருவாகி வருகிறது. இப்படி பிஸி ஷெட்யூல் போட்டு நடித்து வரும் ரஜினிகாந்த்தின் துணிச்சலான பிளாஷ்பேக் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தற்போது மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
1996ம் ஆண்டில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, நடிகர் ரஜினி குறித்து அவதூறாக பேசியதற்காக ஒரு பேட்டி மூலம் விளக்கம் கொடுத்து இருந்தார். ரஜினிகாந்த் கருப்பு பணம் வாங்கினாரா?இல்லையா? என்பது தான் ரஜினி குறித்து முன்வைக்கப்பட்ட அவதூறு. அதற்கு ரஜினிகாந்த் விளக்கமளிக்கையில் "என்னோட பெயரை பயன்படுத்தி அரசியல் செய்யாதீங்க. என்னுடைய ரசிகர்கள் தான் என்னை வாழவைக்கும் தெய்வங்கள். அரசியல் என்ற விஷ ஆயுதத்தை வைத்து எங்களுக்குள் பிரிவு வந்துவிட கூடாது. நான் அவர்களை இழக்க தயாராகயில்லை.
நான் கருப்பு பணம் வாங்கவில்லை என சொன்னால் அது பொய். பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் கருப்பு பணம் வாங்கி இருக்கிறேன். பிறகு நான் செய்வது தவறு என்பதை உணர்ந்து கருப்பு பணம் வாங்குவதை குறைத்து கொண்டேன். திரைத்துறையை சேர்ந்தவராக இருந்து கொண்டு இதை பற்றி நன்கு தெரிந்திருக்கும் ஜெயலலிதாவே கருப்பு பணம் குறித்து கேள்வி எழுப்புவதை என்னவென்று சொல்வது என தெரியவில்லை. ஒரு மிக பெரிய பொறுப்பில் இருக்கும் அவர் இப்படி ஒரு கீழ்த்தரமான விஷயத்தை செய்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
திரைத்துறையில் அதிகமாக வருமான வரி கட்டும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான் என்பதை என்னால் நிரூபிக்க முடியும். என்னிடம் அதற்கான ரிப்போர்ட்ஸ் உள்ளது. இவ்வளவு ஆனா பிறகு கூட ஜெயலலிதா இன்னும் மாறவில்லை என்றால் அவர் வாழ்க்கையில் என்றுமே மாறமாட்டார். முதலில் அவருக்கு இருந்தது பண வெறி. இப்போது அவருக்கு இருப்பது பதவி வெறி. அவர் என்னைக்குமே மாறமாட்டார்" என மிகவும் துணிச்சலாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருந்தார் நடிகர் ரஜினிகாந்த்.