நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டி ரசிகர்கள் வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனைகளையும், வேண்டுதல்களை செய்ய தொடங்கியுள்ளனர். 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்


தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். கிட்டதட்ட 6 வயது முதல் 60 வயது வரையிலான அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த ஒருவராக உள்ள அவரின் நடிப்பில் கடைசியாக கடந்த 2021 ஆண்டு ‘அண்ணாத்த’ படம் வெளியானது. அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் சீரியல் போல இருந்ததாக விமர்சனங்கள் எழுந்ததால் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. இதனைத் தொடர்ந்து ரஜினியின் 169வது படமாக ‘ஜெயிலர்’ பட அறிவிப்பு வெளியானது. 


ஜெயிலர் படம் 


நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் கடந்தாண்டு ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோடு தொடங்கியது. கடந்த ஜூன் மாதம் முடிவடைந்தது. இந்த படத்தில்  ரம்யாகிருஷ்ணன், வசந்த் ரவி, யோகிபாபு, சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, சரவணன், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், சுனில் என பலரும் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 10) வெளியாகும் என தெரிவிக்கப்படுள்ளது. 


ஏற்கனவே  பாடல்கள், ட்ரெய்லர் ஆகியவை மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதால் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி  ஜெயிலர் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டிக்கெட் முன்பதிவில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரைக்காக காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டது. தியேட்டர்களில் கட் அவுட்டுகள், பேனர்கள், போஸ்டர்கள் என திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. 


தமிழ்நாட்டில் முதல் நாள் மட்டும் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்குகிறது. ஆனால் 2 ஆம் நாளில் இருந்து ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அதிகாலை 6 மணிக்கு முதல் காட்சிகள் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வேண்டுதல்களை செய்ய தொடங்கிய ரசிகர்கள் 


இந்நிலையில் ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டி ரசிகர்கள் வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனைகளையும், வேண்டுதல்களை செய்ய தொடங்கியுள்ளனர். அந்த வகையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் ரசிகர்கள் அங்கபிரதட்சணம் செய்து மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் ஆடியோ வெளியிட்டு விழாவில் குடிக்க வேண்டாம் என சொன்ன ரஜினியின் வேண்டுகோளை ஏற்று ரசிகர்கள் இனி குடிக்க மாட்டோம் என உறுதியளித்தனர்.


இதனைத் தொடர்ந்து மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள வெயில் உகந்த அம்மன் திருக்கோவிலில் ரஜினி ரசிகர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.இதனையடுத்து திருப்பரங்குன்றம் ரஜினி மக்கள் மன்றம் நகர செயலாளர் கோல்டன் சரவணன் கோயிலில் நீராடி முழங்காலால் நடந்து வந்து கோவில் வளாகத்தில் அங்கபிரதட்சணம்  செய்தார். அவருடன் ஜெயமணி, முருகவேல் ஆகியோர் மண்சோறு சாப்பிட்டனர். முன்னதாக தேங்காயில் ஜெயிலர் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்  என எழுதி அம்மனின் பாதத்தில் வைத்து பூஜை செய்தனர்.