ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


ஆட்சியை கைப்பற்றிய சந்திரபாபு நாயுடு:


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியது. பாஜக தனிப் பெரும்பான்மையோடு வெற்றி பெறும் என்ற கருத்து கணிப்புகளை எல்லாம் மக்களின் எண்ணங்கள் தவிடு பொடியாக்கி விட்டது. பாஜக கூட்டணி 291 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 234 இடங்களிலும், பிற கட்சிகள் 18 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த மக்களவை தேர்தலோடு ஆந்திர மாநிலத்துக்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. மொத்தம் 175 தொகுதிகளைக் கொண்ட ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றது. 


இப்படியான நிலையில் இந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. அதேசமயம் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி பாஜக மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. 88 தொகுதிகளில் வென்றால் ஆட்சி அமைக்கலாம் என்ற நிலையில் தெலுங்கு தேசம் கட்சி எதிர்பாராத வகையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. 






எதிர்க்கட்சியான ஜனசேனா:


பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வென்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆளும் கட்சியாக இருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வியை தாங்களே எதிர்பார்க்கவில்லை என ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கவலை தெரிவித்திருந்தார். இதனிடையே தெலுங்கு தேசம் கூட்டணி தொண்டர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வரும் நிலையில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தோற்றதை ரஜினிகாந்த் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 


நடந்தது என்ன? 


கடந்தாண்டு மறைந்த ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும், சூப்பர் ஸ்டாருமான என்.டி.ராமாராவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ராமாராவ் மேல் கொண்ட அன்பால் ஷூட்டிங்கை கேன்சல் செய்து விட்டு பங்கேற்றார். விழாவில் பேசிய அவர், என்.டி.ராமராவின் மருமகனும், ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து தள்ளினார்.


“சந்திரபாபு நாயுடு அரசியலில் ஒரு தீர்க்கதிரிசி. எனக்கும் அவருக்கும் 30 ஆண்டுகால பழக்கம் உள்ளது. நான் ஒவ்வொரு முறையும் ஹைதராபாத் வரும்போது சந்திரபாபுவை சந்தித்து பேசுவேன். அவருடைய பேச்சில் ஏராளமான விஷயங்கள் அடங்கியிருக்கும். எப்போதும் பொதுமக்களுக்கு சேவை செய்வது பற்றியே சிந்திப்பார்” என புகழ்ந்தார்.   


ரஜினிகாந்தின் இந்த பேச்சுக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆந்திராவில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரஜினி பேசியது மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான நடிகை ரோஜா ரஜினியை நேரடியாகவே விமர்சித்தார். இதனால் அவரது ரசிகர்கள் ரோஜாவை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்தனர். இப்படியான நிலையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தோற்றதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தங்கள் தலைவரை எப்படியெல்லாம் பேசினீர்கள், அதற்காக தான் அனுபவிக்கிறீர்கள் என சகட்டுமேனிக்கு பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.