மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க இந்தியா கூட்டணியும், பா.ஜ.க. கூட்டணியும் முனைப்பு காட்டி வருகிறது. தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தூத்துக்குடி தொகுதியில் அபார வெற்றி பெற்ற கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். 




தூத்துக்குடி:


தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி, அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்டிஆர் விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரௌனா ரூத் ஜெனி உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 




தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 9 லட்சத்து 80 ஆயிரத்து 791 வாக்குகள் பதிவாகி இருந்தன. வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை திரும்ப பெற மொத்தம் பதிவான வாக்குகளில் 6-ல் 1 பங்கு வாக்கு பெற வேண்டும். அதன்படி பார்த்தால் டெபாசிட் தொகையை பெற 1,63,465 வாக்குகள் பெற வேண்டும்.

அனைவரையும் டெபாசிட்டை இழக்க செய்த கனிமொழி


தி.மு.க வேட்பாளர் கனிமொழி மட்டுமே இந்த வாக்குகளை தாண்டி உள்ளார். தி.மு.க வேட்பாளர் கனிமொழி 6-வது சுற்றிலேயே 1,67,194 வாக்குகளை பெற்று டெபாசிட் தொகையை உறுதி செய்தார்.இவரை தவிர அ.தி.மு.க வேட்பாளர் ரா.சிவசாமி வேலுமணி, த.மா.கா வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், ஜா.ரொவினா ரூத் ஜேன் உள்ளிட்ட 27 வேட்பாளர்களும் டெபாசிட் தொகையை திரும்ப பெறுவதற்கான வாக்குகளை எட்டவில்லை. இதனால் 27 வேட்பாளர்களும் தங்களது டெபாசிட் தொகையை இழந்தனர்.




தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி, எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சிவசாமி வேலுமணியை விட 3 லட்சத்து 92 ஆயிரத்து 738 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமிபதி வெற்றி சான்றிதழை வழங்கினார். அப்போது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.




தூத்துக்குடி மக்களுக்கு நன்றி:


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி., 2-வது முறையாக என்னை வேட்பாளராக நிற்க வாய்ப்பு அளித்த கழக தலைவர், முதல்-அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்காக பாடுபட்ட மாவட்ட செயலாளர்கள், மேயர் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தேர்தல் வெற்றிக்காக எனது தொகுதிக்கு வந்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து தலைவர்களுக்கும், 2-வது முறையாக எனக்கு வெற்றி வாய்ப்பை அளித்து இருக்கக்கூடிய தூத்துக்குடி மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த, தலைதாழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.




பா.ஜனதா கட்சிக்கு வரும்காலம் இல்லை


பா.ஜனதா கட்சிக்கு எதிராக தொடர்ந்து ஒரு எண்ணம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. அவர்கள் ஆட்சியில் இருக்கக்கூடிய அவலங்கள், தொடர்ந்து மக்களை அச்சுறுத்திக் கொண்டு இருக்கக்கூடிய நிலை பா.ஜனதாவுக்கு எதிரான மனநிலையை உருவாக்கி இருக்கிறது. இதனை மக்கள் தெளிவாக உணர்த்தி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பா.ஜனதாவுக்கு இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, கடந்த முறையை விட இந்த முறை 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை உருவாக்கி தந்து இருக்கும் நிலையை பார்க்கிறோம்.


இது தி.மு.க. ஆட்சிக்கு கிடைத்து இருக்க கூடிய வெற்றி. அதே போன்று பா.ஜனதாவுக்கு எதிராக கிடைத்த வெற்றி. தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு நிச்சயமாக வரும் காலம் கிடையாது. எங்கள் வாக்குறுதிகளை மக்கள் நம்புகிறார்கள். முதல்-அமைச்சர் மீது நம்பிக்கையாலும், எதிர்க்கட்சியினர் மீது நம்பிக்கை இல்லாததாலும் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்றார்.




                                        என்னது ஒத்த தபால் வோட்டா- குழம்பிய அதிமுக தமாகா வேட்பாளர்கள்


தூத்துக்குடி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருந்தது. இதில் தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.இதில் மொத்தம் 432 வாக்குகள் பதிவாகி இருந்தன. அப்போது அ.தி.மு.க வேட்பாளர் சிவசாமி வேலுமணிக்கு ஒரு வாக்கும், த.மா.கா வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜய சீலனுக்கு ஒரு வாக்கும் பதிவாகி இருந்தது. மீதம் உள்ள வாக்குகளை பெரும்பாலும் தி.மு.க.வும், நாம் தமிழர் கட்சி வேட்பாளரும் பெற்று இருந்தனர்.இதனால் அ.தி.மு.க, த.மா.கா முகவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் பதிவான வாக்குகளை திரும்ப எண்ண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஆனால் தேர்தல் அதிகாரிகள் அதனை நிராகரித்தனர். ஒரு வாக்குச்சாவடியில்அ.தி.மு.க, த.மா.கா வேட்பாளருக்கு தலா ஒரு ஓட்டு கிடைத்ததால் இரண்டு கட்சியினரும் அதிர்ச்சி அடைந்தனர்.