இந்தியாவில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பணிகள் நேற்று காலை முதல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மத்தியில் ஆட்சியமைக்க பாஜக, காங்கிரஸ் இடையே பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காதது பெரும் ஏமாற்றத்தை அக்கட்சியினருக்கு கொடுத்துள்ளது.
இப்படியான நிலையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட தன்னுடைய அறிக்கையில் "திமுக அரசு செய்துகாட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் அறுவடை செய்திருக்கிறது. மக்களுக்காக சிந்தித்து மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப்பெறும் நல்லாட்சிக்கு ஆதரவளிக்க மக்களும் தயாராக இருப்பதையே இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக 2019 மக்களவை தேர்தலில் தொடங்கி தான் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் அருமை நண்பர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் வெற்றியை குவித்து இருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.இந்தியாவை காக்கும் போரில் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்து களம் கண்ட கூட்டணிக்கு கட்சியினருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாடு மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.சிந்தாமல் சிதறாமல் சந்தேகமில்லாமல் நாம் பெற்று இருக்கும் இந்த வெற்றி இந்தியாவுக்கு வழியும் ஒளியும் காட்டக்கூடியவை.இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க! " என குறிப்பிட்டு இருந்தார்.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை. அக்கட்சிக்கு மாநிலங்களவை ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தலில் திமுக கூட்டணி வென்ற நிலையில் நேற்று மாலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அண்ணா அறிவாலயம் சென்று முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.