உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் ஏன் விழுந்தேன் என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரஜினிகாந்தின் 169-வது படமாக உருவாகியுள்ள “ஜெயிலர்” படம் வெளியானது. அதற்கு முந்தைய நாள் (ஆகஸ்ட் 9) அவர் 4 ஆண்டுகளுக்குப் பின் இமயமலை கிளம்பினார். வழக்கமாக தனது ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு இமயமலை செல்வது ரஜினியின் வழக்கம். ஆனால் இம்முறை ஜெயிலர் படம், லால் சலாம் ஷூட்டிங், ஜெயிலர் இசை வெளியிட்டு விழா என அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் இருந்ததால் ரஜினி உடனடியாக இமயமலை செல்லாமல் இருந்தார்.
ஒருவழியாக இமயமலை போன ரஜினி ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்ற புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து இமயமலை பயணம் முடித்துக் கொண்டு ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். தொடர்ந்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க சென்ற ரஜினி அவர் காலில் விழுந்தது இணையத்தில் கடும் விமர்சனங்களை சந்தித்தது.
இப்படியான நிலையில், இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், 4 ஆண்டுகளுக்குப் பின் இமயமலை சென்று வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பயணம் நல்லபடியாக அமைந்தது. ஜெயிலர் படத்தை மாபெரும் வெற்றி படமாக மாற்றிய என்னை வாழவைக்கும் தெய்வங்களாகிய தமிழ் மக்களுக்கும், உலகத்தில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சன் பிக்சர்ஸ் நிறுவனம், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
தொடர்ந்து ரஜினியிடம் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசி பெற்றது குறித்தும், எதிர் விமர்சனங்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘வயதில் குறைவானவராக இருந்தாலும் யோகி, சன்யாசி ஆகியோர் காலில் விழுவது என் வழக்கம். அதைத்தான் நான் செய்தேன்’ என ரஜினி விளக்கமளித்தார்.
மேலும் ஜார்கண்ட ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்தது நட்பு ரீதியிலானது. அவர்கள் ஜெயிலர் படம் பார்க்க வேண்டும் என சொன்னார்கள் எனவும் ரஜினி தெரிவித்துள்ளார். இதன்மூலம் தன் மீதான சர்ச்சைகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.