இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. இந்த படம் வரும் சுதந்திர தின கொண்டாட்டமாக வரும் 14ம் தேதி வெளியாகிறது.

அதிக விலைக்கு டிக்கெட்:

ரஜினிகாந்த் படம் என்றாலே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அமீர்கான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தின் முன்பதிவு கடந்த 8ம் தேதி தொடங்கியது. டிக்கெட் முன்பதிவு தொடங்கியது முதல் வியாழன் முதல் ஞாயிறு வரை பல இடங்களில் டிக்கெட் முன்பதிவு மின்னல் வேகத்தில் நடந்து முடிந்தது. பொதுவாக, பெரிய நடிகர்களின் படங்களுக்கு முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 

1000 கோடி ரூபாய் வசூல் வடை:

கூலி படத்திற்கும் அதே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கும்பகோணத்தில் உள்ள ஒரு தியேட்டரில் திரையரங்கின் பின்னால் திரையரங்க நிர்வாகமே அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வதாக வீடியோவுடன் எழுந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள திரை விமர்சகர் ப்ளூசட்டை மாறன், இப்படி எல்லாம செஞ்சிதான் ரூபாய் 1000 கோடி வசூல் வடைகளை சுடப்போறீங்களா? என்று பதிவிட்டுள்ளார்.

கூலி படத்திற்கான சிறப்புக்காட்சிக்கு ரூ190, 200 டிக்கெட்டை ரூபாய் 400க்கு விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், விநியோகஸ்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமு் என்று கும்பகோணம் ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

பான் இந்தியா ஹிட்டடிக்குமா?

சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் ரூபாய் 1000 கோடி வசூலை எட்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கன்னடத்தில் கேஜிஎஃப் படம் பான் இந்தியா வெற்றியையும், தெலுங்கில் பாகுபலி, ஆர்ஆர்ஆர், புஷ்பா 2 பான் இந்தியா வெற்றியை பெற்றுள்ள நிலையில், தமிழில் அப்படி ஒரு வெற்றி இதுவரை அமையவில்லை. 

ரூபாய் 1000 கோடி:

ரஜினியின் கூலி படம் புஷ்பா 2 படம் போல ரூபாய் 1000 கோடி வசூலை எட்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 1000 கோடி ரூபாய் வசூலை குறிவைத்து தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும், வெளிநாடுகளிலும் இந்த படத்தை வெளியிடுகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் பொதுவாக அனைத்து படங்களையும் மிக கடுமையாக விமர்சிப்பவர். குறிப்பாக, ரஜினிகாந்த் படங்கள் என்றால் மிக மிக கடுமையாக தாக்கிப் பேசுவார். ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று இழுத்தடித்தது முதல் கட்சி தொடங்குவதாக அறிவித்து பின்னர் கட்சியே தொடங்காமல் அரசியலில் இருந்து விலகியது என மிகக்கடுமையாக விமர்சித்தார். 

ரஜினியின் ஜெயிலர், வேட்டையன் என ரஜினிகாந்த் படங்கள் என்றாலே மிக மிக கடுமையாக விமர்சிப்பார். இப்போது கூலி படத்திற்கும் தனது விமர்சனத்தை தொடங்கியுள்ளார். படம் வெளியான பிறகு மேலும் கூலி படத்தை விமர்சிப்பார் என்றே கருதப்படுகிறது.