Rafale Jets: ஆப்ரேஷன் சிந்தூரின் போது நீண்ட தூர எல்லை தாண்டிய தாக்குதலில் ரஃபேல் போர் விமானம் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் ரஃபேல் விமானங்கள் வாங்க திட்டம்:
இந்திய விமானப்படை கூடுதலாக புதிய ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அரசுகளுக்கு இடையேயான நேரடி ஒப்பந்தம் மூலம் ஃப்ரான்சிடம் இருந்து கொள்முதல் செய்யவும் விரும்புகிறதாம். அந்நாட்டுடனான 114 மல்டி-ரோல் ஃபைட்டர் ஏர்கிராஃப்ட் (MRFA) வாங்கும் திட்டத்தின் கீழ் கூடுதல் ரஃபேல் போர் விமானங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சிலின் (DAC) தேவையை (AoN) ஒப்புக்கொள்ளும் முடிவுக்காக காத்திருக்கும் இந்த திட்டம், அடுத்த இரண்டு மாதங்களுக்குள் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆப்ரேஷன் சிந்தூரின் தாக்கம்
கூடுதல் ரஃபேல் விமானங்களுக்கான அழுத்தம் ஆப்ரேஷன் சிந்தூருக்கு பிறகு அதிகரித்துள்ளதாம். அந்த ராணுவ நடவடிக்கையின் போது, நீண்ட தூர எல்லை தாண்டிய தாக்குதலில் ரஃபேல் போர் விமானங்கள் முக்கிய பங்காற்றின. அதேநேரம், சீனாவில் தயாரிக்கப்பட்ட j-10 போர் விமானங்களை PL-15 ஏவுகணைகளுடன் சேர்த்து பாகிஸ்தான் பயன்படுத்தியது. அதன் மூலமாக இந்தியாவின் 3 ரஃபேல் விமானங்கள் உட்பட 6 போர் விமானங்களை வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறினாலும், மத்திய அரசு அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
குறையும் விமானப்படையின் வலிமை:
இந்திய விமானப்படையில் உள்ள ஸ்குவாட்ரன்களின் எண்ணிக்கை ஏற்கனவே 31 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில், கடைசியாக பயன்பாட்டில் உள்ள MiG-21 ஸ்குவாட்ரன்களும் அடுத்த மாதம் ஓய்வு பெற்றால், விமானப்படையில் உள்ள ஸ்குவாட்ரன்களின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவில் 29 ஆக குறைய உள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானின் ஒருங்கிணைந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளத் தேவையான அங்கீகரிக்கப்பட்ட 42.5 படைப்பிரிவுகளை விட இந்திய விமானப்படை மிகவும் குறைவான போர் விமானங்களையே கொண்டுள்ளது. பாகிஸ்தானுக்கு குறைந்தபட்சம் 40 J-35A ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை வழங்க சீனா தயாராகி வருவதால், கூடுதல் ரஃபேல் போர் விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
விமானப்படையை வலுப்படுத்த கோரிக்கை
ரஃபேல் போர் விமானக் குழுவை விரிவுபடுத்துவது புதிய உலகளாவிய டெண்டரை வெளியிடுவதை காட்டிலும் வேகமாகவும் செலவு குறைந்ததாகவும் இருக்கும் என்று இந்திய விமானப்படை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இந்தியா ஏற்கனவே அம்பாலா மற்றும் ஹசிமராவில் 36 ரஃபேல் விமானங்களை பயன்படுத்துகிறது. இரண்டும் தலா ஒரு கூடுதல் ஸ்குவாட்ரனை சேர்க்கும் திறன் கொண்டவை. கடற்படைக்கும் இதேபோன்ற தளம் தயாராகி வருகிறது. ஏப்ரல் மாதம் கையெழுத்தான ரூ.63,887 கோடி ஒப்பந்தத்தின் கீழ் 2028 ஆம் ஆண்டு முதல் 26 ரஃபேல்-எம் ஜெட் விமானங்கள் விமானக் கப்பல் INS விக்ராந்தில் சேர உள்ளன.
2035 ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டு AMCA தயாராகும் வரை, ரஷ்யாவின் சுகோய்-57 அல்லது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-35 போன்ற ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களின் இரண்டு முதல் மூன்று படைப்பிரிவுகளை குறிவைத்துள்ள நிலையில், IAF இன்னும் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவில்லை. இருப்பினும் வெகு விரைவிலேயே இந்த கொள்முதலுக்கான நடவடிக்கைகள் வேகமெடுக்கும் என கூறப்படுகிறது.