இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த். ஜெய்பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் இவர் நடித்து வரும் வேட்டையன் வெளியீட்டிற்கு தயாராக உள்ள நிலையில், ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171-ல் நடித்து வருகிறார்.
முடிச்சுரலாமா?
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று இந்த படத்தின் பெயர் டீசருடன் அறிவிக்கப்பட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பக்கா ஆக்ஷன் பேக்கேஜாக ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படத்திற்கு கூலி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் மையப் பொருளாக போதைப்பொருள்கள் இருந்து வந்தது. இந்த படத்தின் டீசரில் முழுக்க முழுக்க தங்கமே பிரதானமாக இடம்பெற்றுள்ளது. இந்த படத்தில் தனது ஆரம்ப காலத்தில் இடம்பெற்ற தப்பென்ன சரியென்ன வசனத்தை பேசியுள்ள ரஜினிகாந்த், டீசரின் இறுதியில் முடிச்சுரலாமா? என்று பேசியிருப்பார்.
கமல் - ரஜினி:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில், கமல்ஹாசன் பேசும் ஆரம்பிக்கலாமா? என்ற வசனம் மிகவும் பிரபலம். உலக நாயகன் கமல்ஹாசனுக்கு எப்படி ஆரம்பிக்கலாமா? என்ற வசனத்தை லோகேஷ் கனகராஜ் வைத்திருந்தாரோ? அதேபோல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு முடிச்சுரலாமா? என்று பெயர் வைத்துள்ளார்.
கமல்ஹாசனின் ஆரம்பிக்கலாமா? ரஜினிகாந்தின் முடிச்சுரலாமா? வசனங்களை ஒப்பிட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல, நடிகர் விஜய்யை வைத்து அவர் இயக்கிய லியோ படத்தில் நடிகர் விஜய் ப்ளடி ஸ்வீட் என்று பேசும் வசனமும் இடம்பெறும். இதையும் ரசிகர்கள் ஒப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.
கொண்டாடும் ரசிகர்கள்:
நடுத்தர வயதான தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஆரம்பகால ஆக்ஷன் படம்போல இந்த படம் உருவாகியிருப்பதால், இதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநாதி மாறன் தயாரித்துள்ளார்.